காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை ஆட்டோக்காரர் ஒருவரின் சமயோசித செயல்பாட்டால் மீட்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சுஜாதா என்பவருக்கு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 3 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. காலை குளியலறை சென்ற சுஜாதா, திரும்பி வந்து பார்க்கும்போது குழந்தை மாயமாகி இருந்தது.
அவர் கத்திக் கூச்சலிடவே, மருத்துவமனையின் ஊழியர்கள் குழந்தையைத் தேடத் தொடங்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த சுரேஷ் என்ற ஆட்டோக்காரர், சற்று முன்புதான் கட்டைப்பையில் குழந்தையுடன் ஒரு தம்பதி தனது ஆட்டோவில் ஏறி பேருந்து நிலையத்தில் இறங்கியதாகக் கூறியுள்ளார்.
உடனடியாக ஊழியர்கள் அவரது ஆட்டோவிலேயே ஏறி பேருந்து நிலையம் சென்றபோது, பேருந்துக்காகக் காத்திருந்த அந்த தம்பதி பிடிபட்டனர்.
இதற்குள் தகவலறிந்து போலீசாரும் அங்கு வந்து, குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் குழந்தையை கடத்தியவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமு – சத்தியா தம்பதியினர் என்பது தெரியவந்தது.