சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் திருநங்கைகளுக்காக சிறப்புத் தனி மருத்துவ சிகிச்சை மையத்தை ‘டீன்’ வள்ளி சத்தியமூர்த்தி திறந்து வைத்தார்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவ சிகிச்சை மையம் துவக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக மதுரை மற்றும் சென்னை அரசு மருத்துவமனைகளில் திருநங்கைகளுக்கு என தனி சிகிச்சைப் பிரிவு துவக்கப்பட்டது.
இதன் தொடர் நடவடிக்கையாக சேலத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவு துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சேலம் அரசு மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் திருநங்கைளுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தை ‘டீன்’ வள்ளி சத்தியமூர்த்தி துவக்கி வைத்தார். புதிதாக துவக்கப்பட்டுள்ள இந்த புற நோயாளிகளுக்கான சிகிச்சைப் பிரிவில், திருநங்கைகள் தினமும் வந்து தங்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள் மற்றும் நோய்கள் குறித்து பரிசோதனை மேற்கொள்ளலாம். அதற்கேற்ற வகையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை ‘டீன்’ வள்ளி சத்தியமூர்த்தி கூறியது: ”தமிழகத்தில் மூன்றாவதாக சேலம் அரசு மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சைப் பிரிவில் திருநங்கைகளுக்கான அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரத்யேகமாக மார்பு அறுவை சிகிச்சை, பிறப்புறுப்பு அறுவை சிகிச்சை, கர்ப்பப்பையை அகற்றுதல், முகத்தில் உள்ள முடிகளை நீக்குதல் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சைகளுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனை திருநங்கைகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
திருநங்கைகள் கூறும்போது , ‘சேலம் அரசு மருத்துவமனைகளில் பொதுவாக புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் மருத்துவ சீட்டு பெறுவதற்கு வரிசையில் நின்று தான் வாங்கவேண்டும். ஆனால், திருநங்கைகள் ஆண், பெண் பாலின வரிசையில், எந்த வரிசையில் நிற்பது என்ற ஐயப்பாடு ஏற்படும். இதனால், எங்களுக்கு மன உளைச்சல் அதிகரிப்பதோடு, தனி சிகிச்சை பிரிவு இருந்தால் நன்றாக இருக்கும் என தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தோம். அந்த கோரிக்கையை அரசு நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றனர்.