ரஜினிகாந்தின் அதி தீவிர ரசிகர் என்றால் நமக்கு டக்கென நினைவுக்கு வருவது மதுரையைச் சேர்ந்த ரஜினி முத்து என்று அன்புடன் அழைக்கப்பட்ட ஏ.பி.முத்துமணிதான். இவர்தான் ரஜினிக்காக முதன் முதலில் ரசிகர் மன்றத்தையும் தொடங்கினார். இவர் சமீபத்தில் உடல்நலக்குறைவால் மரணமடைந்த சம்பவம் ரஜினி ரசிகர்களையும் மதுரை மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
தன் முதல் ரசிகர் மன்றத்தை உருவாக்கியவர் என்பதால் ரஜினியின் மனதுக்கு நெருக்கமானவராக இருந்தார் இந்த முத்துமணி. அவரின் திருமணம்கூட ரஜினிகாந்த் வீட்டின் பூஜையறை முன்புதான் நடைபெற்றது. 2020-ல் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியபோது முத்துமணியும் அதனால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சையிலிருந்தார்.
இத்தகவல் ரஜினிக்கு தெரிந்து உடனே முத்துமணியுடன் போனில் உரையாடியவர் “உடம்பை பாத்துக்கோங்க, சீக்கிரம் நலமாயிடுவீங்க” என்று பேசி முத்துமணிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினார். இந்த நிலையில்தான் சமீபத்தில் மீண்டும் உடல்நலம் குன்றி சிகிச்சை எடுத்து வந்த முத்துமணி, திடீரென்று மரணமடைந்தார்.
இதைத் தொடர்ந்து முத்துமணியின் மனைவியிடம் தொலைப்பேசி வாயிலாக உரையாடி துக்கம் விசாரித்திருக்கிறார் ரஜினிகாந்த். அதில் அவர், “சாரிம்மா, எனக்கு ஐந்து நாள்களாக உடம்பு சரியில்லை. அதனால்தான் நேற்றோ, முன்தினமோ என்னால் உடனடியாக அழைத்துப் பேச முடியவில்லை. அவரின் இழப்பு என்னை மிகவும் கஷ்டத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது” என்று சொல்ல, முத்துமணியின் மனைவி, தன் பெண் குழந்தை தற்போதுதான் பத்தாவது படித்து வருவதாகவும், அவளைப் பார்த்துக்கொள்ள முத்துமணி இல்லாதது வருத்தமளிக்கிறது எனவும் தெரிவிக்க, அதற்கு ரஜினி, “அது குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். அவர்களை நன்றாகப் படிக்க வையுங்கள். என் உடல்நலம் தேறியவுடன் நான் நேரில் வந்து பார்க்கிறேன். ஒருவேளை நீங்கள் சென்னை வந்தாலும் என்னை வந்து பாருங்கள்” என்று பதில் தெரிவித்திருக்கிறார்.
இந்த ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.