இஸ்லாமாபாத்: இந்தியாவிலிருந்து அதிவேகமாக பறக்கும் சூப்பர் சோனிக் பொருள் ஒன்று விழுந்ததாக அந்நாட்டின் ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் பாபர் இப்திகார் கூறியுள்ளார். இது ஏவுகணையாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்தியா பகுதியில் இருந்து வந்த கடந்த 9ம் தேதி அதிவேகமாக பறக்கும் பொருள் ஒன்று நொறுங்கி விழுந்ததை பாகிஸ்தான் விமானப்படையில் வான் பாதுகாப்பு நடவடிக்கை மையம் கண்டுபிடித்தது. இந்த பொருளின் தன்மை பற்றி தெரியவில்லை. பாகிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள நகரமான மியான் சன்னுவில் நொறுங்கி விழுந்த அந்த மர்ம பொருள், ஹரியானாவின் சிர்சாவில் இருந்து ஏவப்பட்டது. இந்த பொருள் பயணித்த பாதை இந்தியா மற்றும் பாகிஸ்தான் வான்வெளியில் பல சர்வதேச மற்றும் தேசிய விமானங்கள் வரும் பாதை. அந்த பொருள் மனித உயிர் மற்றும் சொத்துகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இவ்வாறு அவர் கூறினார்.
பாகிஸ்தான் விமானப்படையின் ஆய்வில் , அது சூப்பர் சோனிக் ஏவுகணை என தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய தூதரக அதிகாரியை அழைத்து இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வான்வெளியில் நிகழ்த்தப்பட்ட அத்துமீறல் இது. விமான பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். இதுபோன்ற அலட்சியத்தால் ஏற்படும் விரும்பத்தகாத விளைவுகளை கவனத்தில் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
Advertisement