லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் இந்தியா முழுவதும் நாளை (மார்ச் 12-ம் தேதி) நடைபெறவிருக்கிறது. லோக் அதாலத் பற்றியும், அதன் பயன்கள் பற்றியும் பல முக்கியத் தகவல்களை நாகப்பட்டினம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும் சார்பு நீதிபதியுமான செ.சுரேஷ்குமார் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
“நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகப்படியாகத் தேங்குவதைத் தவிர்ப்பதற்கும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு எளிதாக தீர்வுகாணவும் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் உதவுகிறது. இதில், சட்டப் பணிகள் ஆணைக் குழு சட்டம் – 1987-ன் படி, பொதுமக்கள் தங்களது வழக்குகளைச் சமரசமாகத் தீர்த்துக்கொள்ளலாம். இந்த சட்டத்தின் படி தேசிய, மாநில, மாவட்ட, வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுக்கள் செயல்படுகின்றன.
நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள உரிமையியல் (சிவில்), சமரசத்திற்கு உரிய குற்றவியல் (கிரிமினல்) வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், காசோலை சம்பந்தப்பட்ட வழக்குகள், ஆகியவை மக்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு சமரசமாகத் தீர்வு அளிக்கப்படும். மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை சமரசமாகத் தீர்த்து கொள்வதால், கால விரயம் தவிர்க்கப்படுகிறது.
மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தீர்த்துக்கொள்ள கட்டணம் கிடையாது. ஏற்கெனவே நீதிமன்றத்தில் நீதிமன்ற கட்டணம் செலுத்தியிருப்பின், செலுத்திய முழுத் தொகையையும் மீண்டும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இரு தரப்பினரும் சமரசமாக செல்வதால், இரு தரப்பினரும் வெற்றி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள். இதனால், எந்தவித மனகசப்பும் இரு தரப்பினரிடையே ஏற்படாது” என்றார் நீதிபதி செ.சுரேஷ்குமார்.
மேலும் அவர் கூறுகையில், “நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளில் ஏதேனும் ஒரு தரப்பினர் வழக்கில் சமரசத் தீர்வுகாண வேண்டுமென்று விரும்பினால், சம்பந்தப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நீதிமன்றத்தில், மக்கள் நீதிமன்றத்திற்கு வழக்கு தொடர்பான கோப்புகளை அனுப்ப குறிப்பானை (மெமோ) தாக்கல் செய்யலாம். வழக்கில் சமரசம் ஏற்பட வாய்ப்பிருந்தால், அந்த நீதிமன்றம் தானாகவே மக்கள் நீதிமன்றத்திற்கு அந்த வழக்கு தொடர்பான கோப்புகளை அனுப்பலாம்.
மக்கள் நீதிமன்றத்திற்கு வரும் வழக்குகள் அனைத்திற்கும் ஓய்வுபெற்ற அல்லது பணியில் இருக்கும் நீதிபதி, வழக்கறிஞர், சமூக நல ஆர்வலர் ஆகியோர் உள்ளடங்கிய அமர்வின் மூலம் தீர்வு காணப்படும். மக்கள் நீதிமன்றம் தொடர்பான சந்தேகங்களுக்கு, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் இலவச சட்ட உதவி மையத்தை அணுகலாம். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவை அணுக இயலாதவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவை அணுகலாம். மக்கள் நீதிமன்றத்தில் ஏற்படும் தீர்வே இறுதியானது. மேல்முறையீடு கிடையாது” என்று செ.சுரேஷ்குமார் தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் தேசிய மக்கள் நீதிமன்றம் எந்தெந்த தேதிகளில் நடைபெறும் என்று தேசிய சட்டப் பணிகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. முதலாவதாக, நாளைக்கு (மார்ச் 12-ம் தேதி) இந்தியா முழுவதும் லோக் ஆதாலத் நடைபெறுகிறது. அடுத்தபடியாக 14.05.2022, 13.08.2022, 12.11.2022 ஆகிய தேதிகளிலும் இந்தியா முழுவதும் மக்கள் மன்றம் நடைபெறவிருக்கிறது.