சண்டிகர்: பஞ்சாப் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில காங்கிரஸ் தலைவர் சித்து, ‘மக்களின் குரல் கடவுளின் குரல்’ என ஆம் ஆத்மிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் சூழல் உள்ளது. 117 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி 90 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இன்குலாப் அல்லது புரட்சி என்றும், மக்களுக்கு வாழ்த்துகள் என்றும் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
‘‘மக்களின் குரல் கடவுளின் குரல்… பஞ்சாப் மக்களின் ஆணையை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். ஆம் ஆத்மிக்கு வாழ்த்துக்கள்’’என அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.