Nidhish VB Tamil News: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அபியும் நானும். சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் ரியா மனோஜ், வித்யா மோகன், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் மீனா மற்றும் சிவாவின் மகன் முகில் ரோலில் நித்தீஷ் என்ற சிறுவன் நடித்து வருகிறார்.
பிரபல குழந்தை நட்சத்திரமாக மாறியிருக்கும் நித்தீஷ் பற்றி அறிமுகம் செய்யவே தேவையில்லை. மிமிக்ரி, டைமிங் காமெடி என இவர் தோன்றும் நிகழச்சி மற்றும் சீரியலில் பட்டையை கிளப்பி வருவதோடு, தனி கவனம் ஈர்த்து வருகிறார். மேலும், இவர் ஒரு மாடலாகவும், விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். தவிர, அவ்வப்போது சின்னத்திரை பிரபலங்களுடன் சேர்ந்து இன்ஸ்டா ரீல்ஸ்களும் செய்து வருகிறார். அவையனைத்தும் சமூக ஊடகங்களில் வைரலாகி விடுகின்றன.
தற்போது சின்னத்திரையில் உள்ள முன்னணி நடிகர்கள் நடிகைகளுடன் நடித்து வரும் நித்தீஷ், தன்னுடைய 7 வயதில் கின்னஸ் சாதனை செய்து மிரட்டியுள்ளார். அவருக்கு சீரியல் ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
நித்தீஷ், 60 கார்டூன் கதாபாத்திரங்களின் பெயர்களை 60 நொடிகளில் வேகமாக கூறி உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து இருக்கிறார். இது குறித்து அவரது அப்பா பூபதி பேசுகையில், “நித்தீஷ் 60 வினாடிகளில் 60 கார்டூன் கதாபாத்திரங்களின் பெயர்களை வேகமாக கூறினார். முந்தைய உலக சாதனை 52.” என்று குறிப்பிட்டுள்ளார்.
சீரியல், பள்ளிப் படிப்பு என பிஸியாக இருந்து வரும் நித்தீஷ் இப்படியொரு சாதனைனையை நிகழ்த்தி இருப்பது சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் உத்வேகம் அளிக்கும் என்பதில் ஐயமில்லை. அவர் வேகமாக கூறிய 60 கார்டூன் கதாபாத்திரங்களில் பேட்மேன், சூப்பர்மேன், ஜோக்கர், வொண்டர் வுமன், ஃப்ளாஷ் போன்றவைகளும் அடங்கும்.
இந்த சாதனை குறித்து அவர் பேசுகையில், “எனக்கு ஸ்பைடர் மேன் மிகவும் பிடிக்கும். எனவே நான் மார்வெல் காமிக் கதாபாத்திரங்களை முயற்சிக்க நினைத்தேன். ஆனால் எல்லோரும் டிசி காமிக்ஸ் முயற்சிக்க கூறினால். எனவே நான் அந்த சவாலை கையில் எடுத்தேன்.
இந்த சாதனையை நிகழ்த்த ஒரு மாதம் நான் தயார் செய்தேன். ஆரம்பத்தில் எல்லாம் குழப்பமாக இருந்தது, ஆனால் நான் கற்றுக்கொள்ள ஆரம்பித்தவுடன், பெயர்களை நினைவில் வைத்துக் கொள்ள ஆரம்பித்தேன். இதனால், சாதனை படைக்க முடிந்தது, நான் மகிழ்ச்சியடைந்தேன். இது ஒரு சிறந்த அனுபவமாகவும்இருந்தது. இந்த சாதனையையும் நான் விரைவில் முறியடிப்பேன் என்று நம்புகிறேன்” என்று நித்தீஷ் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“