“BC அங்கீகாரம் கிடைத்தும் டி.என்.பி.எஸ்.சி.யில் சாதிப் பெயர் இல்லை – அல்லாடும் நீலகிரி திய்யா மக்கள்” என்ற தலைப்பில் தி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி அன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த செய்தி வெளியிடப்பட்டு சில நாட்களிலேயே திய்யா வகுப்பு டி.என்.பி.எஸ்.சி. இணையத்தில் இடம் பெறுவதை உறுதி செய்துள்ளார் தமிழக பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர். தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் அவரை தொடர்பு கொண்ட போது, உள்ளாட்சி தேர்தல் காரணமாக தொடர் பணிகளுக்கு மத்தியில் இருந்தாக தெரிவித்த அவர் இந்த விவகாரம் குறித்து உடனே நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தார்.
இன்று காலை தமிழக பணியாளர்கள் தேர்வாணைய இணையத்தில் திய்யா வகுப்பு, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அம்மக்கள் கூறியுள்ளனர்.
”இந்த விவகாரம் என்னுடைய பார்வைக்கு வரவும் என்னுடைய உதவியாளரை டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தேன். அன்று மாலையே திய்யா வகுப்பு பி.சி. பட்டியலில் இணைக்கப்பட்டுவிட்டது. இதற்கு ஒரு மணி நேரம் தான் தேவைப்பட்டது. ஆனாலும் இதற்கு 2 ஆண்டுகள் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருந்திருக்கிறது” என்று அமைச்சர் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.
ஈழவ திய்யா விவகாரம்
1976ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் (அரசாணை எண் 58) “தமிழகத்தில் இருக்கும் நபர்களுக்கும், தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் இனத்தை சார்ந்தவர்களுக்கு மட்டுமே பிற்படுத்தப்பட்டோர் அங்கீகாரம் வழங்கப்பட்டும். தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ஒரு இனத்தை சேர்ந்தவராயினும், வெளி மாநிலத்தை சேர்ந்தவர் எனில் அவர் பிற்படுத்தப்பட்டோராக கருதப்படமாட்டார்கள்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அதே ஆண்டில் தமிழக எல்லைக்கு வெளியே உள்ளனர் என்ற அடிப்படையில் மலபார் மாவட்டங்களான பொன்னானி, பாலக்காடு, வள்ளுவநாடு மற்றும் எர்நாடு திய்யாக்களை தமிழக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்கியது தமிழக அரசு.
இப்பிரிவு மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதும் 1992ம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டது. தங்களின் குழந்தைகளுக்கு இதனால் எவ்விதமான சலுகைகளும் கிடைக்கவில்லை என்பதையும், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தங்களின் சாதியை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தொடர்ந்து வைத்து வந்தனர்.
வருவாய்துறை செயலாளர் அதுல்ய மிஷ்ரா தலைமையிலான 4 நபர் குழு ஒன்றை அமைத்து, தமிழகத்தில் உள்ள ஈழவர்கள் மற்றும் திய்யாக்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் அங்கீகாரம் வழங்க தேவையான புறக்காரணிகள் என்ன என்பதை ஆய்வு செய்து, பரிந்துரைகளை வழங்குமாறு அதிமுக அரசு 2020ல் உத்தரவு பிறப்பித்தது.
கமிட்டியின் பரிந்துரையை ஏற்று, 2020ம் ஆண்டு திய்யா பிரிவினருக்கு பிற்படுத்தப்பட்டோர் அங்கீகாரத்தை தமிழக அரசு வழங்கியது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல வாரியத்தின் செயலாளர் பி. சந்திரமோகன் அது தொடர்பான அரசாணையை (G.O 55) வெளியிட்டார்.
அதிமுக அரசு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் திய்யா வகுப்பினரை சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டும் கூட டி.என்.பி.எஸ்.சி. இணையத்தில் இடம் பெறாமல் இருந்ததால் தமிழக அரசு பணிகளுக்கான தேர்வுகளில் பொதுப்பட்டியலில் போட்டியிடும் நிலைமை திய்யா பிரிவினருக்கு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.