உக்ரைனில் விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு| Dinamalar

மரியுபோல் : மேற்கு உக்ரைனில் உள்ள விமான நிலையங்கள் மீது, ரஷ்ய படையினர் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ரஷ்ய ராணுவத்தினர், கடந்த 24ம் தேதி முதல், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் நுழைந்து, தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். குண்டுகளை பொழிந்து வான்வழி தாக்குதல் நடத்தி, நாட்டின் பிரதான நகரங்களை கைப்பற்றி வருகின்றனர்.இ

ந்த தாக்குதல்களில் இருந்து தப்பிக்க, ஆயிரக்கணகான உக்ரைன் மக்கள், அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், மேற்கு உக்ரைனில் அமைந்துள்ள லுட்ஸ்க் மற்றும் இவானோ பிரான்கிவ்ஸ்க் நகரங்களில் உள்ள விமான நிலையங்களை குறிவைத்து ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன.

இதையடுத்து, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, அங்குள்ள மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த தாக்குதல்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.இதேபோல், நிப்ரோ நகரில், ரஷ்ய படையினர் மூன்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

latest tamil news

இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதற்கிடையே, ரஷ்ய படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பக்லனோவா முராவிகா பகுதி, மீண்டும் உக்ரைன் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.

உக்ரைன் ரசாயன ஆயுதங்களை தயாரித்து வருவதாக ரஷ்யா அளித்துள்ள புகாரை, அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக மறுத்துள்ளார். உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்ய படையினருக்கு உதவ, தன்னார்வலர்களை அனுப்பி வைக்க, அதிபர் விளாடிமிர் புடின் முடிவு செய்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில், உக்ரைன் தலைநகர் கீவுக்கு, 5 கி.மீ., அருகில் ரஷ்ய படையினர் சென்றுள்ளதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.பேச்சில் தீர்வு?போரை முடிவுக்கு கொண்டுவர, உக்ரைன் – ரஷ்யா இடையே தொடர்ந்து பேச்சு நடந்து வருகின்றது. இந்நிலையில், தலைநகர் மாஸ்கோவில் நேற்று, பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவை, ரஷ்ய அதிபர் புடின் சந்தித்துப் பேசினார்.

அப்போது புடின் கூறுகையில், “ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்து வரும் பேச்சில், சில நேர்மறையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ரஷ்யா சார்பாக பேச்சில் பங்கெடுத்த அதிகாரிகள், இதுகுறித்து என்னிடம் தெரிவித்துள்ளனர்,” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.