உக்ரைன் விவகாரத்தில் ரஷ்ய துருப்புகள் பின்னடைவை எதிர்கொண்டுவரும் நிலையில் முதன்மை தளபதிகள் 8 பேர்கள் மீது புடின் கடுங்கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தோல்வியில் முடிந்த உளவுப்பிரிவு நடவடிக்கை, மோசமான திட்டமிடல் என உக்ரேனில் போரின் தொடக்க நாட்களில் ரஷ்ய துருப்புக்கள் தொடர்ச்சியான தோல்விகளை எதிர்கொண்டுள்ளன.
குறிப்பிட்ட நாட்களுக்குள் போரை முடிவுக்கு கொண்டுவாரததும், சூழலுக்கு ஏற்றவாறு திட்டத்தை வகுக்காததும் பின்னடைவுக்கு காரணம் என கண்டறிந்த விளாடிமிர் புடின் தற்போது 8 தளபதிகளை பொறுப்பில் இருந்து நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் துருப்புகள் பலவீனமடைந்துள்ளதாகவும், பல குழுக்களால் குழப்பமடைந்து காணப்படுவதாகவும், அதனால் அவர்கள் மிக விரைவில் சரணடைந்து விடுவார்கள் எனவும் புடினுக்கு கூறப்பட்டுள்ளது.
ஆனால் நிலைமை நேரெதிராக அமைந்ததால் புடின் மிகவும் கோபமடைந்துள்ளதாகவும், தமது உளவுத்துறையை அவர் சாடியதாகவும் பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.
உக்ரைன் விவகாரத்தில் மோசமான முடிவுகளை முன்னெடுக்க உளவுத்துறையே காரணம் எனவும் புடின் விமர்சித்துள்ளார்.
இதனால் எதிர்பார்த்ததை விடவும் அதிக உயிரிழப்புகளை ரஷ்யா எதிர்கொண்டுள்ளதாகவும், மூன்று நாட்களில் முடிவுக்கு கொண்டுவந்து விடலாம் என்ற போர் இரண்டு வாரங்கள் கடந்தும் நீடிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உக்ரேனிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், இதுவரை 12,000 வீரர்களை ரஷ்யா இழந்திருக்கும் என தெரிவிக்க, ஐரோப்பிய உளவு அமைப்புகள் 9,000 வீரர்கள் வரையில் ரஷ்யா இழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளது.
ஆனால் 3,000 வரையில் வீரர்களை ரஷ்யா இழந்திருக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, எதிரிகளின் தற்போதைய திட்டம் என்ன என்பது தங்களுக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ள உக்ரேனிய அதிகாரிகள்,
போர் தொடங்கியதில் இருந்தே, அவர்கள் தங்கள் திட்டங்களை திருத்தி வருவதாகவும், ஆனால் எவையும் அவர்களுக்கு சாதமாக அமையவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இப்போது 8 தளபதிகளை பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளனர். மட்டுமின்றி புதிய தளபதிகளும் பொறுப்புக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு இது மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.