உக்ரைன் ரஷ்யா இடையே போர் தீவிரமாக நடந்து வரும் சூழலில் ரஷ்யா தனது நாட்டின் பெண் ராணுவ வீரர்களுக்கு அழகு போட்டி நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது .
விளாடிமிர் புதினின் படைகள் உக்ரைனின் போர் மண்டலத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், ‘Makeup Under Camouflage’ எனும் தலைப்பில் ஒரு அழகு போட்டி நடத்தப்பட்டதாகவும், அதில் கலந்துகொண்டவர்களில் ஏவுகணைப் படைகளைச் சேர்ந்த பெண் ராணுவ வீரர்களும் அடங்குவர் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக இராணுவ இதழான ‘ரெட் ஸ்டார்’ வெளியிட்ட அறிக்கையில், “இந்த அழகு போட்டியில் சுமார் 40 அழகிகள் பங்கேற்றனர். முதல் போட்டியே போர் ஒப்பனை மற்றும் அதன் பயன்பாடு பற்றியதாகும். அந்த போட்டியில், கதிரியக்க, இரசாயன அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும், வாயு முகமூடிகள் மற்றும் சிறப்பு பாதுகாப்பு உடைகள் அணிந்து, AK-74 ரகத் துப்பாக்கி தாங்கிய ஆடைகளை அணிந்துகொண்டு, போர் மண்டலத்தின் தீ-தாக்குதல் மண்டலத்தைப் பெண் வீரர்கள் கடந்து செல்வது போல வடிவமைக்கப்பட்டிருந்தது.
அடுத்த கட்ட போட்டியாக அவர்களின் பொது அறிவு சோதிக்கப்பட்டது. மேலும், படைப்பு மற்றும் சமையல் தொடர்பான சோதனைகளும் அந்த அழகு போட்டியில் இருந்தன. இந்த போட்டியில் பங்கேற்பாளர்கள் அனைவரும் இளம் பெண்கள் அல்ல. வயதான பெண்களும் கலந்துகொண்டனர்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.