டேராடூன்: உத்தராகண்டில் ஆட்சியைத் தக்கவைக்க பாஜக மேற்கொண்ட கடும் பிரயத்தனங்களுக்கு பலன் கிடைத்துள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தவுடன் தபால் வாக்கு நிலவரம் காங்கிரஸுக்கு சற்றே சாதகமாக இருந்தது. ஆனால், அடுத்தடுத்த சுற்றுகள் எண்ணப்பட்டபோது பாஜக முன்னிலை பெறத் தொடங்கியது.
70 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட உத்தராகண்டில் அண்மை நிலவரப்படி, பாஜக 44, காங்கிரஸ் 21, பகுஜன் சமாஜ் 2, ஆம் ஆத்மி 1 என்ற நிலையில் முன்னிலை வகிக்கின்றன. சுயேச்சைகள் 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறார்கள். பெரும்பான்மைக்கு 36 இடங்களே தேவை எனும் சூழலில், பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகிறது.
கட்டிமா தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் புஷ்கர் சிங் தாமி பின் தங்கியுள்ளார். அதேபோல் காங்கிரஸ் கட்சியி மூத்த தலைவரும் உத்தராகண்ட் முன்னாள் முதல்வருமான ஹரீஷ் ராவத்தும் லால்குவா தொகுதியில் பின்தங்கியுள்ளார்.
உத்தராகண்ட் மட்டுமல்ல உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. உ.பி. தேர்தல் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டம் என்று கூறப்பட்ட நிலையில் அங்கு 262 இடங்களில் பாஜக முன்னிலை வகிப்பது பாஜகவும் சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.
மேலும், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளால் பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏறுமுகத்தில் உள்ளது.