உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அகிலேஷ் யாதவ் தோற்கவில்லை; மாறாக ஏமாற்றப்பட்டிருக்கிறார் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் ஆளும் பாஜக தனித்து போட்டியிட்டு 255 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி 111 தொகுதிகளை கைப்பற்றி இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. இதையடுத்து, அங்கு பாஜக மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது.
இந்நிலையில், உத்தரபிரதேச தேர்தல் முடிவுகள் குறித்து மம்தா பானர்ஜியிடம் கொல்கத்தாவில் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறுகைியில், “உத்தரபிரதேச தேர்தலில் பாஜக பெருவாரியான வெற்றியை பெற்றிருப்பதாக கூற முடியாது. தேர்தல் ஆணையத்தையும், மத்தியப் படைகளையும் கையில் வைத்துக் கொண்டு இந்த வெற்றியை அவர்கள் வாங்கி இருக்கிறார்கள். எனவே, இந்த தேர்தலில் அகிலேஷின் சமாஜ்வாதி தோற்கவில்லை. மாறாக அவர் ஏமாற்றப்பட்டிருக்கிறார். அதனால் அவர் கவலைப்பட தேவையில்லை. பாஜகவின் வெற்றியை மக்களுடன் சேர்ந்து எதிர்க்க வேண்டும்” எனக் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM