வாஷிங்டன்,
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் 15-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு தேடி வெளியேறி வருகின்றனர்.
ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. இதனிடையே துறைமுக நகரான மரியுபோலில் பிரசவ ஆஸ்பத்திரி மீது ரஷியா நடத்திய வான்தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறார்கள். பிரசவ நேரத்துக்காக காத்திருந்த கர்ப்பிணிகளும், டாக்டர்களும் படுகாயம் அடைந்துள்ளனர்.
தலைநகர் கீவுக்கு மேற்கே உள்ள 2 நகரங்களிலும் ஆஸ்பத்திரிகள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி உள்ளன. தலைநகர் கீவின் மேற்கே 2.60 லட்சம் மக்கள் வசிக்கிற ஜைட்டோமர் நகரில் 2 ஆஸ்பத்திரிகள் மீது குண்டுகள் விழுந்தன. இந்த கொடூர செயலுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், ரஷியா ஒருபோதும் போரை விரும்பியதில்லை என ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரவ் கூறியுள்ளார். தற்போதைய மோதலையும் முடிவுக்கு கொண்டுவரவே ரஷியா முயற்சிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். கடந்த 2 நாட்களில் 1 லட்சம் பேர் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ரஷிய துருப்புகள் நடத்திய தாக்குதலில் இதுவரை சுமார் 280 கல்வி நிறுவனங்கள் சேதம் அடைந்துள்ளதாக உக்ரைனின் கல்வி த்துறை மந்திரி செர்ஹி ஷ்கார்லெட் தகவல் தெரிவித்துள்ளார்.