லக்னோ,
உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்த பொது தேர்தலில் மொத்தம் உள்ள 403 இடங்களில் 274 இடங்களைக் கைப்பற்றி பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்-மந்திரி ஆகிறார்.
கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் 47 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருந்த சமாஜ்வாதி கட்சி இந்த தேர்தலில் மொத்தம் 111 இடங்களைக் கைப்பற்றி 2-வது இடம் பிடித்துள்ளது. மேலும் 32.06 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இந்த நிலையில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தங்கள் மீது நம்பிக்கை வைத்து கடந்த தேர்தலை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று தந்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பதிவில் அவர், ‘கடந்த தேர்தலை விட வாக்கு சதவீதத்தை ஒன்றரை மடங்கு அதிகப்படுத்தி வெற்றி இடங்களை 2 மடங்கு அதிகப்படுத்திய உத்தரப்பிரதேச மக்களுக்கு எங்களின் இதயப்பூர்வமான நன்றிகள்.
இதன் மூலம் பாஜகவின் இடங்களை குறைக்க முடியும் என்று காட்டியிருக்கிறோம். பாஜகவின் இடங்களை குறைப்பது தொடரும்.
இப்போது பாதிக்கும் மேற்பட்ட மாயைகளும் குழப்பங்களும் தீர்ந்துவிட்டது. இன்னும் சில நாள்களில் மீதியும் தீர்ந்து விடும். பொது மக்களின் விருப்பத்திற்கான போராட்டம் வெற்றி பெறும்’ என்று தெரிவித்துள்ளார்.