வறுமை மிகக்கொடிது. அந்த வறுமையிலும், தனது பிள்ளைகளை ஒற்றை ஆளாக வளர்த்து ஆளாக்கிவரும் ஏழைத்தாய், தனது பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமல் தவித்துவருகிறார்.
அரசால் வழங்கப்பட்ட நிலத்தில் சிதலமடைந்த மேற்கூரையிலான பத்துக்கு பத்து அடி அளவிலான குடிசை வீடு, அணைந்த அடுப்பு. சீரங்கம், மற்றும் குழந்தைகளின் முகத்தில் பிரதிபலிக்கும் சோகம், பள்ளி விடுமுறை என்றால் உணவுக்கு வழியில்லாத பரிதாபம். இவையே இக் குடும்பத்தின் வறுமையை உணர வைக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான முருகேசன் உடல்நலக்குறைவால் விரக்தியடைந்து தற்கொலை செய்தநிலையில், சீரங்கம், வயலில் களைபறிப்பது, நாற்று நடுவது, 100 நாள் வேலைக்குச் செல்வது என கிடைக்கும் வேலைகளை செய்து, நான்கு பிள்ளைகளை பராமரிக்கிறார்.
வறுமையிலும் பிள்ளைகளை படிக்க வைத்துவரும் சீரங்கம் அவர்களின் படிப்புக்கு தேவையான பொருட்கள் கூட தன்னால் வாங்கித் தர முடியவில்லை என்று கலங்குகிறார். பருவ வயதை எட்டிவிட்ட இரு பெண்குழந்தைகளுக்கு தேவையான உடை உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கிறார் இந்த ஏழைத்தாய். பெண்பிள்ளைகளுக்கு தாயின் நிலை புரிந்தாலும் இயலாமையின் துயரம் வடிகிறது இவர்களின் வார்த்தைகளில்.
அரசு வேலை வழங்கினால் நான்கு பிள்ளைகளையும் காப்பாற்றி விட முடியும் என்ற நம்பிக்கையில் ஆட்சியர் தொடங்கி அனைவரிடமும் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்கிறார் சீரங்கம். அரசு வீடு கட்டும் திட்டத்தில் தனக்கு வீடு ஒதுக்கப்பட்டதாக கூறும் சீரங்கம், அந்த தொகையை கொண்டு தன்னால் வீடு கட்டமுடியாது என்றும், அரசு தனக்கு வேலை வழங்கினால் தனது பிள்ளைகளின் பசியை போக்கி, அவர்களை படிக்க வைத்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM