காங்கிரஸ் தலைமையில் "ராட்சச" கூட்டணி.. ஆலோசகராக "பி.கே".. இதெப்படி இருக்கும்?!

5 மாநிலத் தேர்தலில் கிடைத்த பெரிய அடியால்
மமதா பானர்ஜி
டக்கென கீழே இறங்கி வந்து விட்டார்.
காங்கிரஸ்
உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து 2024 லோக்சபா தேர்தலை சந்திக்க தயார் என்று அவர் அறிவித்துள்ளார். மமதாவின் இந்தப் பேச்சுக்குப் பின்னால்
பிரஷாந்த் கிஷோர்
இருக்கலாம் என்று பரபரப்பு கிளம்பியுள்ளது.

5 மாநில சட்டசபைத் தேர்தல்
பாஜக தவிர்த்த பிற கட்சிகளுக்கு பெரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது. ஒன்றாக இணைந்து தேர்தல்களை சந்தித்தால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்ற பாடத்தை அது கற்றுக் கொடுத்துள்ளது.

குறிப்பாக கோவா தேர்தலில் இதை அப்பட்டமாக காங்கிரஸும், பிற கட்சிகளும் உணர்ந்துள்ளனர். அங்கு காங்கிரஸ், திரினமூல், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி ஆகியவை இணைந்து தேர்தலை சந்தித்திருந்தால் நிச்சயம் இக்கூட்டணிக்குத்தான் வெற்றி கிடைத்திருக்கும். ஈகோ மோதலில் அதை காங்கிரஸும் சரி, திரினமூல் காங்கிரஸும் சரி தவற விட்டு விட்டனர்.

இதேபோலத்தான் உ.பியில் கடந்த தேர்தலை சமாஜ்வாடியும், காங்கிரஸும் இணைந்து சந்தித்தன. ஆனால் இந்த முறை பிரிந்து போட்டியிட்டனர். அங்கும் பாஜக ஆட்சியைப் பிடித்து விட்டது. தேசிய அளவில் காங்கிரஸ் அல்லாத 3வது அணியை உருவாக்கும் முயற்சியில் மமதா பானர்ஜி, கே.சி.ஆர். ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இவர்களது முயற்சிக்கு இதுவரை பெரிய அளவில் ஆதரவு கிடைத்ததாக தெரியவில்லை.

இந்த நிலையில்தான் ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள், அவர்களுக்கு நல்லதொரு பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளன. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பழமொழிக்கேற்ப, எதிர்க்கட்சிகள் அனைத்தும் சிந்தாமல், சிதறாமல் இணைந்து நின்றால் மட்டுமே, பாஜகவை எதிர்த்து வெல்ல முடியும் என்பதை இவை உணர்ந்துள்ளன. இதை மமதா பானர்ஜி இன்று மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

வாங்க சேர்ந்து போட்டியிடுவோம்

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் மமதா பானர்ஜி பேசுகையில், காங்கிரஸ் விரும்பினால் 2024 லோக்சபா தேர்தலை அனைவரும் இணைந்து சந்திப்போம். அதற்கு நாங்கள் தயார். எதிலும் ஆவேசம் காட்ட வேண்டாம். பாசிட்டிவாக சிந்திப்போம். நான்கு மாநில தேர்தலில் பாஜக வென்றிருப்பதால் அதற்கு எந்தப் பயனும் கிடைக்காது. அதற்கு நஷ்டமே கிடைக்கும்.

2024 தேர்தலின் முடிவுகளை இந்தத் தேர்தல் முடிவுகள் பிரதிபலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பது அபத்தமானது. இந்தத் தேர்தல் முடிவு எப்படி 2024 தேர்தல் முடிவை பிரதிபலிக்க முடியும். இது சாத்தியமற்றது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் நிறைய மோசடிகள் நடந்துள்ளன என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். மக்களின் வாக்குகளை பாஜக பெறவில்லை. ஓட்டுக்களை அது அபகரித்துள்ளது. அப்படித்தான் அது ஜெயித்துள்ளது.

தேர்தல் ஆணைய அதிகாரிகள் பல வாக்குப் பெட்டிகளை எடுத்துச் சென்றுள்ளனர். அவற்றை தடயவியல் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். இந்த தேர்தல் முடிவுகளால் அகிலேஷ் யாதவ் மனம் உடைந்து போய் விடக் கூடாது. அவர் திடமுடன் இருக்க வேண்டும். சமாஜ்வாதிக் கட்சியின் வாக்கு சதவீதம் 2017ம் ஆண்டு 20 சதவீதமாக இருந்தது. இந்தத் தேர்தலில் அது 37 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது முக்கியமானது. பாஜகவை வீழ்த்தும் இந்த மோதலில் சமாஜ்வாதிக் கட்சி சிறப்பாகவே செயல்பட்டுள்ளது என்றார் மமதா பானர்ஜி.

என்னாச்சு மமதாவுக்கு

மமதா பானர்ஜியின் இந்த திடீர் பேச்சுக்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. 2024ம் தேதிக்கான ஆயத்தப் பணிகளை இப்போதே எதிர்க்கட்சிகள் ஆரம்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கனவே இருந்து வருகிறது. ஆனால் ஆளாளுக்கு ஒரு பக்கம் போகப் பார்த்ததால் இந்த முயற்சிகளில் தேக்க நிலை காணப்பட்டது. ஆனால் தற்போது மமதாவே அந்த ஒருங்கிணைப்புப் பணிகளை ஆரம்பிக்க ஆர்வம் தெரிவித்திருப்பதால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் உறுதியுடன் அணி திரளும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இதைப் பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸும் ஆக்கப்பூர்வமாக முன்வர வேண்டும் என்பதே அத்தனை கட்சிகளின் எதிர்பார்ப்பாகும்.

திமுக, காங்கிரஸ், திரினமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதாதளம் என அனைத்து வலுவான பிராந்தியக் கட்சிகளும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக தேர்தலை சந்திக்க முடிவு செய்தால் நிச்சயம் அது பாஜகவுக்கு பெரும் சவாலாகவே இருக்கும். இந்த நிலையில்தான் மமதாவின் பேச்சுக்குப் பின்னால் பிரஷாந்த் கிஷோர் இருக்கலாமோ என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.

மமதாவின் ஆலோசகராக இருக்கிறார் பிரஷாந்த் கிஷோர். தேசிய அளவில் வலுவான அணி உருவாக வேண்டும் என்று ஆசையும்படுகிறார். அதை மமதா தலைமையில் உருவாக்கவும் விரும்புகிறார். கோவா தேர்தலில் போட்டி கூட அதற்கான வெள்ளோட்டம்தான். ஆனால் அது தோல்வியடைந்து விட்டது. எனவே ஸ்டிராட்டஜியை பி.கே. மாற்றியுள்ளதாக சொல்கிறார்கள். அதாவது காங்கிரஸ் தலைமையிலேயே மெகா கூட்டணி அமைப்பது என்பதே அந்த உத்தியாகும். அதற்கு பி.கே. ஆலோசகராக செயல்படுவது என்றும் மமதா தரப்பு முடிவடெுத்திருப்பதாக சொல்கிறார்கள். இதற்கு காங்கிரஸ் தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் ஒப்புக் கொள்ளும் என்றே தெரிகிறது. ஆனால் காங்கிரஸ் இதை எப்படி எடுத்துக் கொள்ளும் என்று தெரியவில்லை. அதனால்தான் காங்கிரஸ் “பாசிட்டிவாக” சிந்திக்க வேண்டும் என்று ஒரு பன்ச் வைத்துப் பேசியுள்ளார் மமதா.

பி.கே, மமதா ஆகியோரின் திட்டம் ஒர்க்அவுட் ஆனால் நிச்சயம் இது மிகப் பெரிய ராட்சச கூட்டணியாக உருவெடுக்கலாம்.. அப்படி உருவெடுத்தால் நிச்சயம் பாஜக தரப்பிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.