ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் தோல்வியையே சந்தித்துள்ளது. அதிலும் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் வெறும் 2 தொகுதிகளை மட்டுமே வென்றது. ஆனால், பா.ஜ.க-வோ உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களைக் கைப்பற்றியுள்ளது. பஞ்சாப்பில் 92 இடங்களைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி முதல்முறையாக அங்கு ஆட்சியமைக்கவுள்ளது. அங்கு ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் வெறும் 18 இடங்களை மட்டுமே பெற்றது.
இதையடுத்து, கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, “பஞ்சாப்பில் காங்கிரஸின் தோல்விக்கு அமரீந்தர் சிங் தான் காரணம். அமரீந்தர் சிங்கின் நான்கரை ஆண்டுகால ஆட்சியின் எதிர்ப்பை முழுவதையும் சமாளிக்க முடியவில்லை, எனவே தான் மாற்றத்திற்காக மக்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களித்தனர்” என நேற்று ட்வீட் செய்திருந்தார்.
இந்த நிலையில் அமரீந்தர் சிங் தன மீது வந்துள்ள விமர்சனத்திற்குப் பதிலளிக்கும் விதமாக காங்கிரஸை கடுமையாக சாடி ட்வீட் செய்துள்ளார். அதில், “காங்கிரஸின் தலைமை தலைமை ஒருபோதும் கற்றுக்கொள்ளாது. உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸின் படுதோல்விக்கு யார் பொறுப்பு? உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் பற்றி என்ன சொல்வார்கள்? இதற்கான பதில் சுவர்களில் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் எப்போதும் போல அதைப் படிப்பதை அவர்கள் தவிர்த்துவிடுவார்கள் என நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டு விமர்சித்திருந்தார்.
பஞ்சாப்பின் முன்னாள் முதல்வரான அமரீந்தர் சிங், உட்கட்சி மோதல் காரணமாக தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸிலிருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என புதிதாக கட்சி தொடங்கி பா.ஜ.கவுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தார். அவரின் கட்சியானது ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.