பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் அபாரமாக வெற்றி பெற்று, முதல்வராகப் பதவியேற்கவுள்ள
பகவந்த் மான்
சிங் இன்று டெல்லியில் ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்தித்தபோது நடந்த நிகழ்வு வைரலாகி வருகிறது.
பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி பல வரலாறுகளைப் படைத்து தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. முதல் முறையாக காங்கிரஸ், அகாலிதளம் அல்லாத கட்சி ஒன்று பஞ்சாபில் ஆட்சியமைக்கவுள்ளது. 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக தொகுதிகளை வென்ற கட்சியாக ஆம் ஆத்மி உருவெடுத்துள்ளது. இப்படி பல வரலாறுகளைப் படைத்துள்ளது இக்கட்சி.
புதிய முதல்வராக பகவந்த் மான் பதவியேற்கவுள்ளார். இவர் அடிப்படையில் ஒரு காமெடி நடிகர். மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாக இருப்பவர். இவரது தெளிவான சிந்தனையும், வெளிப்படையான பேச்சும் ஏற்கனவே மக்களைக் கவர்ந்துள்ளது. இந்த நிலையில் அவர் முதல்வராக எப்படி செயல்படப் போகிறார் என்பதைப் பார்க்க மக்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று டெல்லியில் ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்தித்துப் பேசினார் பகவந்த் மான். அப்போது துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவும் உடன் இருந்தார். அப்போது கெஜ்ரிவாலின் காலைத் தொட்டு உணர்ச்சிப்பூர்வமாக வணங்கினார் பகவந்த் மான். அவர் காலில் விழுந்ததை தடுக்கவில்லை கெஜ்ரிவால். மாறாக அவர் முழுமையாக காலைத் தொட்டு வணங்கி எழுந்திருக்கும் வரை காத்திருந்து பின்னர் கட்டிப்பிடித்து அவரைத் தட்டிக் கொடுத்தார்.
கெஜ்ரிவாலைத் தொடர்ந்து சிசோடியா காலிலும் விழப் போனார் பகவந்த் மான். ஆனால் அதை உடனடியாக தடுத்து நிறுத்திய சிசோடியா, அப்படியே பகவந்த் மானைக் கட்டிப்பிடித்து தட்டிக் கொடுத்து வாழ்த்தினார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. பகவந்த் மான் காலில் விழ வந்தபோது அதைத் தடுத்து நிறுத்தி தட்டிக் கொடுத்த சிசோடியாவின் செயலைப் பலரும் பாராட்டியுள்ளனர். கெஜ்ரிவாலும் கூட அதேபோல நடந்திருக்கலாமே என்றும் பலர் கூறி வருகின்றனர்.