மாஸ்கோ:
உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரி மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்த ஆஸ்பத்திரி முற்றிலும் சேதம் அடைந்தது. இந்த தாக்குதலில் 3 குழந்தைகள் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
குழந்தைகள் ஆஸ்பத்திரி மீது இரக்கமின்றி தாக்குதல் நடத்தியுள்ளது என்றும், இது இனப்படுகொலை என்றும் உக்ரைன் கடும் கண்டனம் தெரிவித்தது. அதே போல் சர்வதேச அளவில் இந்த தாக்குதல் எதிரொலித்தது. குழந்தைகள் ஆஸ்பத்திரி மீதான தாக்குதலுக்கு ஐ.நா. சபை மற்றும் பல நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்தநிலையில் குழந்தைகள் ஆஸ்பத்திரி மீது தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று ரஷியா தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இகோர் கோனாஷென்கோ கூறும்போது, ‘‘மரியுபோல் நகரில் ரஷிய விமானங்கள் தரையில் உள்ள இலக்குகளை தாக்கும் எந்த பணியையும் மேற்கொள்ளவில்லை.
குழந்தைகள் ஆஸ்பத்திரி மீது வான்வழி தாக்குதல் நடந்ததாக கூறப்படுவது ரஷிய எதிர்ப்பு ஆத்திரத்தை மேற்கத்திய நாடுகள் தக்க வைக்க முற்றிலும் அரங்கேற்றப்பட்ட ஆத்திரமூட்டும் செயலாகும்’’ என்றார்.
மேலும் ஐ.நா. சபைக்கான ரஷியாவின் முதன்மை துணை நிரந்தர பிரதிநிதி டிமிட்ரி போலியான்ஸ்கி டுவிட்டரில் கூறும்போது, ‘‘போலியான செய்தி வெளி வந்துள்ளது’’ என்று தெரிவித்துள்ளார். மேலும் ரஷிய ராணுவத்தரப்பில் கூறும்போது, ‘‘மரியுபோல் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை. உக்ரைன் அரசுதான் அந்த தாக்குதலை நடத்தி உள்ளது’’ என்றும் குற்றம்சாட்டியது.