கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்தியா இலங்கை பக்தர்கள் ஒன்றிணைந்து கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா கொண்டாடுவது வழக்கம்.
இந்த நிலையில் இந்த ஆண்டு இவ்வாலய திருவிழா இன்று மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவில் இந்தியாவைச் சேர்ந்த 76 பக்தர்களும், இலங்கையை சேர்ந்த 88 பக்தர்களும் பங்கேற்றுள்ளனர். அதனைத்தொடர்ந்து சிலுவைப்பாதை சிறப்பு திருப்பலி மற்றும் தேரோட்டம் நடைபெறுகிறது.
நாளை காலையில் மீண்டும் இந்தியா-இலங்கை பக்தர்கள் மற்றும் இலங்கை கடற்படையினர் பங்கேற்கும் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. அதன்பின் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.
மேலும் கச்சத்தீவு செல்லும் பக்தர்கள் விலை உயர்ந்த தங்க நகைகள், மதுபானங்கள், ரூபாய் நோட்டுகளை எடுத்து செல்ல ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
மேலும் குறிப்பிட்ட இடத்தில் இருந்து மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கச்சத்தீவில் இன்று இரவு இலங்கை அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தலைமையில் இந்தியா இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.