கொடைக்கானல் அருகே பெருமாள்மலை வனப்பகுதிக்குள் சுமார் 500 ஏக்கருக்கும் மேலாக எரிந்துவரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பெருமாள்மலை வனப் பகுதிகளான தோகை வரை, மயிலாடும் பாறை மற்றும் மச்சூர் வனப்பகுதிகளில் சுமார் 500 ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் மச்சூர் வனப்பகுதியில் பற்றி எரியத் தொடங்கிய காட்டுத்தீ, இன்று அதிகாலை முதல் மயிலாடும் பாறை, மயில் தோகை வரை, குருசடி பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. பெரும் பரப்பளவில் எரியும் காட்டுத்தீயால் வான் முட்டும் அளவிற்கு கடும் புகை மூட்டம் சூழ்ந்து அந்த பகுதியில் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்த வனத்துறையினர் நள்ளிரவு முதல் தீத்தடுப்பு எல்லைகள் அமைத்தும், புதர்களை வெட்டி தடுப்புகள் அமைத்தும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வனப்பகுதிகளில் எரியும் காட்டுத் தீயால் அரிய வகை மரங்கள், செடி, கொடிகள் மற்றும் பூச்சியினங்கள், ஊர்வன என பலவும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கோடைகாலம் வந்தாலே ஏப்ரல், மே மாதங்களில் இதுபோன்று தொடர்ந்து எரியும் காட்டுத்தீயை உலங்கூர்தி ஹெலிகாப்டர் உதவியுடன் அணைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இயற்கை ஆர்வலர்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM