புதுடெல்லி: நடந்து முடிந்துள்ள கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் அம்மாநில முன்னாள் முதல்வரை ஆம் ஆத்மி வேட்பாளரான கார் மெக்கானிக்கின் மகன் தோற்கடித்துள்ளார்.
கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் சர்ச்சில் அலமாவ் போட்டியிட்ட பெனவுலிம் தொகுதி அதிகம் பேசப்பட்டது. இங்கு அவரை ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளரான கார் மெக்கானிக் மகன் வென்ஸி வீகாஸ் வென்றுள்ளார். இதே பெனவுலிம் தொகுதியில் ஐந்து முறை எம்.எல்.ஏவாக இருந்த சர்ச்சில், கோவாவின் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்தவர். இந்த முறை தேர்தலுக்கு முன்பாக சர்ச்சில், மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார்.
மேற்கு வங்க முதல்வரான மம்தா கடந்த வருடம் டிசம்பரில் கோவா வந்திருந்தார். அப்போது, அவரது கட்சியில் இணைந்த காங்கிரஸாரில் சர்ச்சில் அதிக முக்கியத்துவம் பெற்றார். பிறகு திரிணமூல் காங்கிரஸ் சார்பில் அவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். இதன் பிரச்சாரத்தில் தன்னை ஆம் ஆத்மிக்காக எதிர்த்த வென்ஸி வீகாஸை, ‘அவன் ஒரு குழந்தை’ என விமர்சித்தார் சர்ச்சில். இந்தக் குழந்தை தான் தற்போது முன்னாள் முதல்வரையே தோல்வியுறச் செய்துள்ளது.
தனது தேர்தல் போட்டியிலும் அதிக பிரபலமாகாத ஆம் ஆத்மியின் வென்ஸி, அதன் முடிவுகளுக்கு பின் அதிகப் புகழடைந்துள்ளார். இவரது வெற்றிக்காக ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால், லெவன்ஸிக்கு போன் செய்து வாழ்த்தினார். லெவன்ஸி வென்ற தொகுதியில் காங்கிரஸுக்காகப் போட்டியிட்ட புதிய வேட்பாளர் ஆண்டனியோ பிலெஸியானோ டயஸுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. இங்கு 1,271 வாக்குகள் வித்தியாசத்தில் லெவன்ஸி, ஆம் ஆத்மிக்காகச் சர்ச்சிலை தோற்கடித்திருந்தார்.
டெல்லியில் மூன்றாம் முறையாக ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபிலும் வென்றுள்ளது. கோவாவில் இக்கட்சிக்கு இரண்டு தொகுதிகளில் வெற்றி கிடைத்துள்ளது, ஆம் ஆத்மிக்கு உற்சாகத்தைத் தந்துள்ளது.