சினிமா கதை திருட்டை மையமாக வைத்து தயாராகி உள்ள படம்
கதை திருட்டு என்பது சினிமாவில் நடந்து வருகிற ஒன்று. அதையே மையமாக வைத்து ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். படத்தின் தலைப்பு படைப்பாளன். தியான் பிக்சர்ஸ் சார்பில் நட்சத்திரம் செபஸ்தியான் தயாரித்துள்ளார். தியான் பிரபு இயக்கி, நடித்துள்ளார்.
காக்கா முட்டை ரமேஷ், விக்கி மற்றும் பாடகர் வேல்முருகன், அஸ்மிதா, மனோபாலா, சதுரங்க வேட்டை வளவன், நிலோபர், அருவி பாலா, ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், இயக்குனர் தருண்கோபி, திருச்சி வேலுசாமி உள்பட பலர் நடித்துள்ளனர். வேல்முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார், பாலமுரளி இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் தியான் பிரபு கூறியதாவது: இது முழுக்க முழுக்க சினிமாவில் இயக்குனராக துடிக்கும் ஒரு உதவி இயக்குனரின் கதை. முன்பெல்லாம் பட தயாரிப்பாளர்கள் எளிமையான இடத்திலிருந்து வந்தவர்களாக இருந்தார்கள். ஆனால் இப்போது பெரும்பாலான படங்களை தயாரிப்பது கார்ப்பரேட் நிறுவனங்கள் தான்.
அவர்கள் பெரும்பாலும் கதை கேட்பது கிடையாது. முழு ஸ்கிரிப்ட் கொடுங்கள் படித்துவிட்டு சொல்கிறோம் என்று கதையை வாங்கி கிடப்பில் போட்டு பின்பு அவர்களை அழைக்கிறார்கள். சில நாட்களுக்குப் பிறகு பிரபல இயக்குனரை வைத்து அந்த கதையை படமாக்கி வெளியிடுகிறார்கள். அந்த உதவி இயக்குனரின் உழைப்பு வலிகளுக்கு மதிப்பு கொடுப்பது இல்லை.
அப்படி ஒரு கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றிற்கு கதை சொல்லப் போன ஒரு உதவி இயக்குனரின் சொந்த கதை தான் இந்தப் படம். சினிமாவை பொருத்தவரை ஒரு உதவி இயக்குனர் வளர்வதற்கு மிகுந்த சிரமங்களை அவர்கள் சந்திக்கிறார்கள் அவர்களுக்கு பெண் கிடைப்பதில் இருந்து வீடு கிடைப்பது வரை அனைத்திலும் பெரும் சங்கடங்களை அனுபவிக்கிறார்கள். சினிமா இயக்குனர் என்றால் தவறான கருத்து மக்களிடையே பரவி இருக்கிறது. ஆனால் தன் படைப்பின் மூலம் நல்ல நல்ல கருத்துக்களையும் காமெடிகளையும் சொல்லி மக்களை மகிழ வைப்பவன் ஒரு படைப்பாளன் தான்.
அப்படியான வலி மிகுந்த உதவி இயக்குனரின் வலிகளையும், வழிகளையும் இந்த படம் வெளிச்சம் போட்டு காட்டும் இந்த கதை பல உண்மை சம்பவங்களை உங்களுக்கு நினைவூட்டும். இன்று வரை சினிமாவில் வெவ்வேறு விதமான கதை திருட்டுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன இவை அனைத்தும் மாற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். என்கிறார்.