விவசாயத்தில் புதிய உள்ளூர் தொழில்நுட்பங்களை கண்டுபிடித்தல், புதிய எந்திரங்களைக் கண்டுபிடித்தல், இயற்கை முறையில் வேளாண்மை செய்வது மற்றும் விலை பொருட்கள் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்த ஆண்டிலிருந்து இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு பரிசளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஆணையர் சமயமூர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், இந்த ஆண்டிலிருந்து உள்ளூரில் புதிய விவசாய தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கும் விவசாயிக்கு ஒரு லட்ச ரூபாயும், புதிய இயந்திரங்களை கண்டுபிடிக்கும் விவசாயிக்கு ஒரு லட்ச ரூபாயும் வழங்கப்பட உள்ளது.
இயற்கை வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகள் மூன்று பேரை தேர்வு செய்து, முதல் பரிசுக்கு ஒரு லட்சமும் இரண்டாம் பரிசுக்கு 60,000 ரூபாயும் மற்றும் மூன்றாம் பரிசுக்கு 40,000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது. மேலும் வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயியை கண்டறிந்து 2 லட்ச ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்படவுள்ளது. இந்த போட்டியில் குத்தகை நிலத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகளும் பங்கு பெறலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோர், தங்களின் தொலைபேசியில் உழவன் ஆப் மூலமாகத் தனது பெயரைப் பதிவு செய்து, அந்தந்த மாவட்டங்களில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு, அந்த அலுவலகத்தில் உள்ள விரிவாக்க மையத்தில் இதற்கான நுழைவுக்கட்டணமாக 100 ரூபாயை செலுத்த வேண்டும். விண்ணப்பத்துடன் கட்டணம் செலுத்திய ரசீதை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாளாக மார்ச் 18-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.