சிறையில் சொகுசு வசதிகள் பெற அதிகாரிகளுக்கு 2கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, இளவரசிக்கு சட்ட விதிமுறைகளை மீறி சொகுசு வசதிகள் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதற்காக சிறை அதிகாரிகளுக்கு சசிகலா 2 கோடி ரூபாய் லஞ்சமாக கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையிலான குழுவும் இதனை உறுதி செய்தது. இதனையடுத்து ஊழல் தடுப்பு அமைப்பினர் சசிகலா மீது வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை அதிகாரி சோமசேகர், டாக்டர் அனிதா, சுரேஷ், கஜராஜ் மாகனூர், சசிகலா, இளவரசி ஆகிய 7 பேர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், கைது நடவடிக்கையில் தப்பிக்க, சசிகலா முன் ஜாமீன் கோரி பெங்களுரூ சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
மனு விசாரணைக்கு வந்த போது, சசிகலாவும், அவரது அண்ணன் மனைவி இளவரசியும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது.