பீஜிங்: வடகிழக்கு சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தில் உள்ள சேங்சுன் நகரில் கடந்த இரண்டாண்டுகளில் இல்லாத அளவுக்கு அன்றாட கரோனா தொற்று அதிகமாகப் பதிவாகியுள்ளது. ஆகையால், 90 லட்சம் பேர் கொண்ட அந்த மாகாணம் முழுமைக்கும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது சீனா.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வூஹான் நகரில் முதன்முதலாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் கரோனா பரவி 3வது, 4வது அலை வரை ஏறபட்டுவிட்டன.
கரோனா முதல் அலையின்போதே சீனா கடுமையான ஊரடங்கு பிறப்பித்து நோயப் பரவைக் கட்டுப்படுத்தியது. இப்போதும் பரிசோதனைகளையோ, நுண் அளவிலான கட்டுப்பாட்டுப் பகுதிகளை அமைப்பதையோ சீனா கைவிடவில்லை.
இந்நிலையில்,வடகிழக்கு சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தில் உள்ள சேங்சுன் கடந்த இரண்டாண்டுகளில் இல்லாத அளவுக்கு அன்றாட கரோனா தொற்று அதிகமாகப் பதிவாகியுள்ளது. ஒரே நாளில் 1000 என்றளவில் தொற்று உறுதியானதால் சீன அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
முதற்கட்டமாக 90 லட்சம் மக்கள் தொகை கொண்ட சேங்சுன், ஷாங்காய் என முக்கிய நகரங்கள் கொண்ட ஜிலின் மாகாணத்திற்கே முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. பெரும்பாலான ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தபடியே பணி என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நகரத்தில் மூன்று வாரங்களுக்கு முன்னால் வெறும் 100 பேருக்கு மட்டுமே தொற்று இருந்தது. இந்நிலையில் திடீரென அன்றாட பாதிப்பு 1369 என்றளவை எட்டியுள்ளது. பெரும்பாலானோருக்கு ஒமைக்ரான் திரிபு தொற்றியுள்ளதாகவே சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து ஜிலின் மாகாணத்தின் சேங்சுன், ஷாங்காய் உள்ளிட்ட பெரு நகரங்கள் ஊரடங்கில் உள்ளன. ஷாங்காய் நகரில் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளுக்குத் திரும்பியுள்ளன. தலைநகர் பீஜிங்கிலும் பல்வேறு குடியிருப்புகளிலும் பகுதிநேர அல்லது முழு ஊரடங்கு அமலில் உள்ளன.
ஷாங்காய் என்பது சீனாவின் மிகப்பெரிய வர்த்தக நகரம். அங்கு ஒருநாள் ஊரடங்கு என்பதே பெரியளவில் பொருளாதார இழப்பை உருவாக்கும். இந்நிலையில் தொடர்ச்சியாக பெரிய அளவிலான முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டாம் என பொருளாதார நிபுணர்கள் அரசுக்கு எச்சரித்துள்ளனர். கடந்த வாரம் சீன விஞ்ஞானிகளுக்கு அரசுக்கு வழங்கிய அறிவுரையில் எதற்கெடுத்தாலும் ஊரடங்கு முடிவை கையிலெடுக்காமல் மற்ற நாடுகளைப் போலவே வைரஸுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.