சேலம்: சேலம் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் சென்னைக்கு விமான சேவை தொடங்குவது குறித்து சேலம் எம்.பி. தலைமையில் நடந்த விமான நிலைய ஆலோசனைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள காமலாபுர விமான நிலையத்தில், மத்திய அரசின் ‘உதான்’ திட்டத்தில் இயக்கப்பட்ட சேலம் – சென்னை பயணியர் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அதே திட்டத்தில் மீண்டும் விமான சேவையைத் தொடர விமான நிலைய அதிகாரிகள் மற்றும் சேலத்தை சேர்ந்த தொழிலதிபர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், சேலத்தில் விமான நிலைய ஆலோசனைக் குழு கூட்டத்தின் தலைவர் எம்.பி. பார்த்திபன் தலைமையில் இன்று நடந்தது. இதில் சேலம் விமான நிலைய இயக்குநர் ரவீந்திர சர்மா, மேட்டூர் உதவி ஆட்சியர் வீர்பிரதாப் சிங் முன்னிலை வகித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில், சேலத்தில் இருந்து இரவு நேர விமான சேவையை தொடங்க தேவையான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்; தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சேலம் – சென்னை இடையிலான விமான சேவையை மத்திய விமான அமைச்சகம் அறிவித்தப்படி, இந்த மாத இறுதியில் தொடங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்; சேலத்திலிருந்து சென்னைக்கு மாலை நேர விமான சேவை தொடங்க வேண்டும்; சேலத்தில் இருந்து திருப்பதி வழியாக ஹைதராபாத்துக்கும், சேலம் – கொச்சி, ஹைதராபாத் அல்லது சென்னை வழித்தடத்தில் ஷீரடிக்கும், மங்களூரு வழியாக கோவாவுக்கு விமான சேவை தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதுகுறித்து சேலம் எம்.பி.யான எஸ்.ஆர்.பார்த்திபன் கூறியது: “சேலம் விமான நிலையத்தில் கூடுதல் விமானங்கள் நிற்பதற்கான இடத்தை ஏற்படுத்திட ரூ.6.5 கோடி மதிப்பில் ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது. பனி மூட்டம் உள்ள காலங்களில் விமானம் இறங்குவதற்கு ஏதுவாக நவீன இயந்திரத்தைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்த இயந்திரம் தற்போது நிறுவப்பட்டுள்ளது.
சேலம் – சென்னை இடையேயான விமான சேவை இந்த மாத இறுதியில் மீண்டும் தொடங்கப்படும். கரோனா காலத்துக்கு முன்பாகவே ‘உதான்’ திட்டத்தின் கீழ் பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக புதுச்சேரிக்கும், அங்கிருந்து சேலம் வழியாக பெங்களூருக்கும் விமான சேவை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. அதனை செயல்படுத்திட வலியுறுத்தப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி காவல் ஆய்வாளர் குமார், ஆலோசனைக்குழு உறப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.