நான்கு மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், பிரதமர் மோடி நேற்று இரவு டெல்லியில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு நிர்வாகிகள் இடையே அவர் ஆற்றிய உரையில், ‘இன்றைய நாளின் கொண்டாட்டம், உற்சாகம் இந்திய ஜனநாயகத்துக்கு உரியது. பெண்களின் வாக்குகளும், பெண்களின் வலிமையும் பாஜ.வை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள், பாஜ.வின் சிறப்பான ஆட்சிக்கும், ஏழைகளுக்கான ஆட்சிக்கும் மக்கள் அளித்துள்ள வலுவான அங்கீகாரத்தையே காட்டுகிறது. இந்த வெற்றியின் மூலம், பாஜ.வினருக்கு முன்கூட்டியே ஹோலி பண்டிகை வந்துள்ளது. ஒவ்வொரு ஏழைகளுக்கும் அவர்களின் உரிமைகள் கிடைக்கும் வரை நான் ஓயப் போவதில்லை,’ என்று தெரிவித்தார்.