தமிழகத்தில் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக நிர்வாகியை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவினருடன் சேர்ந்து அவருடைய சட்டையை கழற்றி தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில், ஜெயக்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் 2 வாரங்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமின் வழங்கியது.
இருப்பினும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது நில அபகரிப்பு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார். இந்த வழக்கில்தான், தற்போது சென்னை உயர் நீதிமன்றம் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவின்குமாருக்கும் அவருடைய சகோதரர் மகேஷ் குமாருக்கும் பிரச்னை இருந்து வந்தது. இதில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி அடியாட்கள் மூலம் தன்னுடைய நிலத்தைப் பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாக மகேஷ் குமார் அளித்த புகாரின் அடிப்படையில், ஜெயக்குமார் மற்றும் அவருடைய மருகன் மகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மார்ச் 11ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில், செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் அளிக்க கோரி ஜெயக்குமார் சார்பில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, ஜெயக்குமார் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயக்குமார் தரப்பில், இந்த பிரச்னை தன்னுடைய மருமகன் நவீன்குமாருக்கும் அவருடைய சகோதரர் மகேஷ்குமாருக்கும் இடையிலான பிரச்னை. இதில், தனக்கு எந்தவித தொடர்பும் இல்லாத நிலையில், தான் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் ஆளும் கட்சியைச் சேர்ந்த மகேஷின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வழக்கில் தன்னை சேர்த்திருக்கிறார்கள் என்று வாதிடப்பட்டது. முன்னாள் அமைச்சரான தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், இந்த வழக்கில், ஜாமின் வழங்க வேண்டும் என்று ஜெயக்குமார் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், காவல்துறை தரப்பில், ஜாமின் வழங்கக்கூடாது என்று ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், இந்த நில அபகரிப்பு வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டார். இதன்படி, ஜெயக்குமார் திருச்சியில் 2 வாரங்கள் தங்கியிருந்து அங்குள்ள கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் கையெடுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ஜெயக்குமார் திருச்சியில் இருந்து திரும்பிய பிறகு, இந்த வழக்கில் வாரந்தோறும் புலன் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஏற்கெனவே, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு 2 வழக்குகளில் ஜாமின் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நில அபகரிப்பு வழக்கிலும் ஜாமின் அளிக்கப்பட்டுள்ளதால், அவர் இன்று சிறையில் இருந்து விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“