இந்தியா சார்பில் கடந்த புதன்கிழமை மாலை 6.50 மணியளவில், ஏவப்பட்ட சோனிக் வகை ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததாக தெரிகிறது. இந்தச் சம்பவம் இந்தியா பாகிஸ்தான் மத்தியில் பெரும் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில், இது குறித்து இந்தியா விளக்கம் அளிக்க வேண்டும் என பாகிஸ்தான் விமானப்படை மேஜர் ஜெனரல் பாபர் இப்திகார் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக பேசிய அவர், “இந்தியாவில் ஹரியானா மாநிலம் சிறுசா நகரத்திலிருந்து ஏவப்பட்ட அதிவேக ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து மியா சானு என்ற பகுதியில் விழுந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட சோதனையில் அது சூப்பர் சோனிக் வகை ஏவுகணை என தெரியவந்துள்ளது. இந்த ஏவுகணை சோதனையில், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இந்திய ஏவுகணை 40,000 அடி உயரத்தில் 124 கி.மீ தூரம் பயணித்து பாகிஸ்தான் எல்லையை தாக்கியிருக்கிறது. இந்திய ஏவுகணை விழுந்ததில் தனியாருக்கு சொந்தமான சில சொத்துகள் சேதமடைந்திருக்கின்றன. பாகிஸ்தானில் விழுந்த ஏவுகணையின் பாகங்களை பறிமுதல் செய்து சோதனை செய்து வருகிறோம். முன்கூட்டியே சரியான தகவல் எதுவும் கொடுக்காமல் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனைக்கு இந்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.