திண்டுக்கல்: கொசவபட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற வீரர்களை காளைகள் தூக்கிவீசி பந்தாடியது. இதில் 40 பேர் காயமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டியில் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நேற்று நடைபெற்றது. திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600 காளைகள் பங்கேற்றன. மாடுபிடி வீரர்கள் 300 பேர் மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு பல்வேறு குழுக்களாக களம் இறக்கப்பட்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் லதா ஜல்லிக்கட்டு விழாவை தொடங்கிவைத்தார். வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க மாடுபிடிவீரர்கள் முயன்றனர். ஆனால் பல காளைகளை பிடித்த வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. ஒரு சில காளைகளை மட்டுமே மாடுபிடி வீரர்களால் பிடிக்கமுடிந்தது.
பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை பிடித்த வீரர்களுக்கும் அலைபேசி, கட்டில்,பீரோ, பாத்திரங்கள் என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவதை திண்டுக்கல் கோட்டாட்சியர் பிரேம்குமார், வட்டாட்சியர் சந்தனமேரிகீதா ஆகியோர் முழுமையாக கண்காணித்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மொத்தம் 40 பேர் காயமடைந்தநிலையில், பலத்த காயமடைந்த ஐந்து பேர் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.