சேலம் விமான நிலைய ஆலோசனைக் குழு கூட்டம் இன்று நடைப்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன், “எதிர்வரும் காலங்களில் திருச்சிக்கு அடுத்து சேலம் விமான நிலையம்தான் பன்னாட்டு விமான நிலையமாக விளங்கும். அதற்கான கட்டமைப்பு வேலைகளை தற்போது தொடங்கி விட்டோம்.
சேலத்திலிருந்து இரவு நேர விமான சேவை துவங்குவதற்கும், கூடுதல் விமானங்கள் நிற்பதற்கும் பார்க்கிங் வசதி ஏற்படுத்தும் வகையில், இந்திய விமானப் போக்குவரத்து துறை 6.5 கோடி மதிப்பீட்டில் திட்டத்தை நிறைவேற்ற ஒப்பந்தப் புள்ளி போடப்பட்டுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் மற்றும் விமானப் போக்குவரத்து துறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சேலம்- சென்னை விமான சேவையை மீண்டும் துவங்குவதற்காக பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்ததின் பேரில், மத்திய விமான அமைச்சகம் மார்ச் 3-வது வாரத்திலிருந்து மீண்டும் விமான சேவை துவங்க அனுமதியளித்துள்ளது. மேலும், விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் அலுவலர்கள் பயன்படுத்தும் வகையில் நவீன கழிப்பிட வசதி ஏற்படுத்த மத்திய விமான அமைச்சகம் 35 லட்சம் ஒதுக்கி, அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.
பல்வேறு விமான நிலையங்கள் இருக்கும்போதிலும், சேலம் விமான நிலையத்திற்கு விமான ஓட்டுநர் பயிற்சி பள்ளி கொண்டுவர தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. இதன்மூலம் மாணவர்கள் விமான சேவை குறித்து அறிந்துகொள்ள முடியும்” என்று கூறினார்.