சர்வக் கட்சி மாநாட்டின் ஊடாக முன்வைக்கப்படும் யோசனைக்கு அமைய தேசிய அரசாங்கத்தை அமைக்கும் தயார் நிலைகள் காணப்படுவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைக்கப்படவுள்ள தேசிய அரசாங்கத்தின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படலாம் எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
இது தொடர்பாக முன்னணி ஊடகம் ஒன்றில் முன்வரிசை அரசியல்வாதிகள் சிலருடன் நடத்திய விவாதத்திற்கு இடையில், இந்த விடயம் சம்பந்தமாக வினவப்பட்டதுடன் அவர்கள் அதனை ஏற்கவோ மறுக்கவோ இல்லை.
இது சம்பந்தமாக கொழும்பில் நடைபெற்ற சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் செய்தியாளர் சந்திப்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி குணதாச அமரசேகர கருத்து வெளியிட்டுள்ளார்.
பிரிவினைவாத மற்றும் அடிப்படைவாத சக்திகளின் நிகழ்ச்சி நிரலை தோற்கடிப்பதற்காகவே கோட்டாபய ராஜபக்சவிற்கு வரலாற்று சிறப்புமிக்க மக்கள் ஆணை கிடைத்தது.
ஏற்கனவே இந்தியா உட்பட மேற்குலக ஏகாதிபத்திய சக்திகள், மனித உரிமைகள் என்ற பெயரில் பிரிவினைவாத வழிக்கான வரைப்படம் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும், பயங்கரவாத தடு்புக் சட்டத்தை அவர்களுக்கு தேவையான வகையில் திருத்துமாறும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
அப்படி செய்யவில்லை என்றால், ஜனாதிபதி உட்பட போருக்கு தலைமை தாங்கிய இராணுவத்தினருக்கு எதிராக சர்வதேச சட்டத்தை நடைமுறைப்படுத்த போவதாக மிரட்டுகின்றனர், அச்சுறுத்துகின்றனர்.
வேறு வார்த்தைகளில் கூறினால், போர் குற்றச்சாட்டுக்களை பணயமாக வைத்து பிரிவினைவாத அரசியலமைப்பு திருத்தம் என்ற கப்பத்தை கோருகின்றனர். இந்த அழுத்தங்களை கொடுப்பதற்காக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை இந்த சக்திகள் தந்திரமாக பயன்படுத்தி வருகின்றன.
இந்த அழுத்தங்களின் பிரதான நிபந்தனை தேசிய அரசாங்கம் என்ற சர்வக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது. அப்போது பிரிவினைவாத மற்றும் சமய அடிப்படைவாத சக்திகள் மாத்திரமின்றி, அவர்களுக்கு மறைமுகமாக குரல் கொடுக்கும் அரசியல் சக்திகளுக்கு அரசாங்கத்துடன் பேரம் பேச முடியும்.
மைத்திரிபால சிறிசேன நேர்மையான நோக்கத்தில் சர்வக் கட்சி மாநாடு யோசனையை முன்வைத்திருக்கலாம். எனினும் அரசாங்கத்திற்குள் இருக்கும் மேற்குலக நிகழ்ச்சி நிரலுக்குள் சக்கியுள்ள சிலர், இந்த யோசனையை தவறாக பயன்படுத்தி தேசிய அரசாங்கத்தை அமைக்க முயற்சித்து வருகின்றனர்.
சவரக் கத்தியில் மீசை வெட்ட முடியும் என்பது போல் கழுத்தையும் அறுக்க முடியும். இதனால், சிங்கள தேசியவாத சக்திகள் இந்த பொறியில் சிக்கக் கூடாது எனவும் குணதாச அமரசேகர குறிப்பிட்டுள்ளார்.