'தோத்தாலும் நாங்க கெத்து தான்!' – அகிலேஷ் யாதவ் பெருமிதம்!

கடந்த தேர்தலை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று தந்த மக்களுக்கு சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நன்றி தெரிவித்து உள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில், 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி முதல் கடந்த 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில், ஆளும்
பாஜக
– அகிலேஷ் யாதவுக்கு இடையே நேரடி போட்டி நிலவியது.

இந்நிலையில் நேற்று, உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள், காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. தொடக்கத்தில் இருந்தே ஆளும் பாஜக முன்னிலை வகித்து வந்தது. மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஆளும் பாஜக, 273 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, 125 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைய உள்ளது. எனினும் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலைக் காட்டிலும் பாஜக பெரிய சரிவைக் கண்டுள்ளது.

கடந்தத் தேர்தலில் 322 தொகுதிகளில் மாபெரும் வெற்றியை பெற்ற பாஜக இந்தத் தேர்தலில் 273 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு தேர்தலில் 47 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருந்த சமாஜ்வாடி கூட்டணி இந்த தேர்தலில் மொத்தம் 125 இடங்களைக் கைப்பற்றி 2வது இடம் பிடித்துள்ளது. மேலும் 32.06 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இந்நிலையில் தங்கள் மீது நம்பிக்கை வைத்து கடந்த தேர்தலை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று தந்த மக்களுக்கு சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘கடந்த தேர்தலை விட வாக்கு சதவீதத்தை ஒன்றரை மடங்கு அதிகப்படுத்தி வெற்றி இடங்களை 2 மடங்கு அதிகப்படுத்திய உத்தர பிரதேச மக்களுக்கு எங்களின் இதயப்பூர்வமான நன்றிகள். இதன் மூலம் பாஜகவின் இடங்களை குறைக்க முடியும் என்று காட்டியிருக்கிறோம். பாஜகவின் இடங்களை குறைப்பது தொடரும். இப்போது பாதிக்கும் மேற்பட்ட மாயைகளும் குழப்பங்களும் தீர்ந்துவிட்டது. இன்னும் சில நாள்களில் மீதியும் தீர்ந்து விடும். பொது மக்களின் விருப்பத்திற்கான போராட்டம் வெற்றி பெறும்’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.