தோ‌ஷத்தால் நோய் பாதிப்பு?- காதல் கணவரை காப்பாற்றுவதாக எண்ணி உயிரை மாய்த்த இளம்பெண்

கோவை:

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே ஓணாப்பாளையம், சிக்கராயன்புதூர் வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் மாலதி(வயது21).

இவரும் காளியண்ண புதூரை சேர்ந்த தனது உறவினரான வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வரும் பார்த்திபன்(25) என்பவரும் காதலித்து வந்தனர்.

இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த பின்னர் பார்த்திபனின் பெற்றோர் அவர்களை ஏற்றுக்கொண்டனர்.

இதனை அடுத்து பார்த்திபன் மனைவியுடன் தனது வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் பார்த்திபனுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கணவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த சில தினங்களாவே மாலதி மனவருத்தத்துடன் இருந்தார்.

சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த, மாலதி காளியண்ணபுதூரில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தொண்டாமுத்தூர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது மாலதியின் வீட்டில் அவர் கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது.

நான் தற்கொலை முடிவை எடுப்பதற்கு யாரும் காரணம் இல்லை. இது எனக்கு நானே பண்ணிகிட்ட பரிகாரம். இதுவரை நான் எடுத்த அனைத்து முடிவுகளுமே சரியாக தான் இருந்தது.

ஆனால் நான் என் வாழ்க்கையில் எடுத்த மிகப்பெரிய முடிவு கல்யாணம் தான்.

எனது கணவருக்கு தோ‌ஷம் இருப்பதாகவும், அதனால் அவரை திருமணம் செய்யாதே என பலரும் கூறினர். ஆனால் நான் அது எதையும் கண்டு கொள்ளாமல், போராடி காதலரை கரம் பிடித்தேன்.

ஆனால் அந்த தோ‌ஷத்தால் எனது கணவர் தினம், தினம் படும் கஷ்டங்களை என்னால் பார்க்க முடியவில்லை.

எனது கணவர் உயிர் காப்பாத்துறதுக்காக என் உயிரை விடவும் தயாராக இருக்கேன். இது நானே நல்லா யோசிச்சு எடுத்த முடிவு தான். இதுக்கு யாரும் காரணம் இல்லை.

நான் மத்தவங்களுக்கு பண்ணுன பாவத்துக்கு மன்னிப்பை தவிர வேற எதுவும் கேட்க முடியாது. வாழும் போது தான் யாருக்கும் உதவியா இருக்கவில்லை. சாகும்போதாவது யாருக்காச்சும் உதவியா இருக்க விரும்புறேன். அதனால என்னுடைய உடல் உறுப்புகள் அனைத்தையும் தானமா கொடுத்து விடுங்கள். நான் எடுத்த இந்த முடிவுக்காக யாரையும் கஷ்டப்படுத்த வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.