நூல் விலை அதிகரிப்பால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி குமாரபாளையத்தில் 15 நாட்கள் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமாரபாளையம் கொங்கு பவர்லூம் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நூல் விலை உயர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் நூல் விலை உயர்வு காரணமாக விசைத்தறி ஜவுளி உற்பத்தியை 15 நாட்கள் நிறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக சங்க நிர்வாகிகள் தரப்பில், விசைத்தறிகளில் காட்டன் ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் 40ஆம் எண் நூல் ஒரு கட்டு, ஆயிரம் ரூபாய் இருந்தது என்றும், சில நாட்களாக சிறிது, சிறிதாக உயர்ந்து, தற்போது, 1,500 ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்தனர்.
இதனால், 100 விழுக்காடு காட்டன் ரகங்கள் உற்பத்தி செய்து வந்த நிலையில், தற்போது, 20 முதல், 30 விழுக்காடு வரை மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதாகவும், கொரோனா தொற்று பரவலால் ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டது என்றும் தெரிவித்தனர்.
மேலும், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காத்திட, ஒரு வாரம் ஜவுளி உற்பத்தி செய்தும், ஒரு வாரம் விடுமுறை விட்டும் வந்த நிலையில், தற்போது மார்ச் 10ஆம் தேதி முதல், 15 நாட்களுக்கு ஜவுளி உற்பத்தியை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.