5 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் டிவிட்டர் பதிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா மாநில முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவைத் தந்துள்ளது. பஞ்சாபில் ஆட்சியை இழந்துள்ளது அக்கட்சி. உத்தராகண்ட் மற்றும் கோவாவிலும் கணிசமான வெற்றி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் அக்கட்சியின் தொண்டர்கள் சோர்வுற்றிருக்கும் நிலையில், அந்த கட்சியின் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் “தலைமை பண்பு ” குறித்த புத்தகத்தை பரிந்துரைப்பதாக பதிவிட்டிருப்பது காங்கிரஸ் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு ‘நெட் பிளிக்ஸ்’ ஓடிடி தளத்தில் என்ன திரைப்படம் பார்க்கலாம் என பதிவிட்டது கட்சி தலைமையுடனான முரண்பாட்டையே வெளிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
நாடுமுழுவதும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அந்த கட்சி எம்.பியே பொதுவெளியில் கட்சி தலைமையை விமர்சிக்கும் விதமாக பதிவிட்டிருப்பது தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை அனைத்து மாநிலத்திலும் மாற்றியமைக்க வேண்டிய பணிகளையும் துரிதப்படுத்த வேண்டியதை காலம் கட்டாயமாக்கியுள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM