லக்னோ: உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்று யோகி ஆதித்ய நாத், 2-வது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார்.
கடந்த 70 ஆண்டு கால உத்தர பிரதேச அரசியல் வரலாற்றில் 5 ஆண்டுகள் பதவியை நிறைவு செய்த எந்தவொரு முதல்வரும் மீண்டும் ஆட்சியை பிடித்தது கிடையாது. முதல்முறையாக அந்த சாதனையை யோகி ஆதித்ய நாத் படைத்துள்ளார்.
உத்தர பிரதேச முதல்வராக பதவி வகித்தவர்கள் நொய்டாவுக்கு செல்ல அஞ்சுவார்கள். அதாவது பதவிக் காலத்தில் அந்த நகருக்கு சென்றால் அடுத்த முறை முதல்வராக முடியாது என்ற மூடநம்பிக்கை அரசியல் தலைவர்களிடம் மேலோங்கி இருந்தது.
இதை பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி முறியடிக்க முயன்றார். கடந்த 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தர பிரதேச முதல்வராக அவர் பதவியேற்றார். அதே ஆண்டு நவம்பரில் நொய்டாவில் நடைபெற்ற திருமணத்தில் அவர் பங்கேற்றார். அதன்பின் கடந்த 2012-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் ஆட்சியை பறி கொடுத்தார். இதன்காரணமாக கடந்த 2012-ல் முதல்வராக பதவியேற்ற அகிலேஷ் யாதவ் நொய்டா செல்வதை தவிர்த்தார்.
இந்நிலையில், கரோனா காலத்தில் நொய்டாவுக்கு நேரில் சென்ற யோகி ஆதித்யநாத் நிருபர்களிடம் கூறும்போது, “நொய்டாவுக்கு வருவதை அரசியல் தலைவர்கள் விரும்புவது கிடையாது. என்னைப் பொறுத்தவரை மக்கள் நலனே முக்கியம்” என்று தெரிவித்தார். இந்நிலையில் யோகி ஆதித்ய நாத் 2-வது முறையாக வெற்றி பெற்று நொய்டா கட்டுக் கதையை உடைத்தெறிந்திருக்கிறார்.-பிடிஐ