சண்டிகர்: பஞ்சாபில் அரிது பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்திருக்கும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைப்பதற்கான பணிகளை துவங்கியிருக்கிறது. 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் சட்டமன்றத்தில் ஆம் ஆத்மி 92 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது. அந்த கட்சியை சேர்ந்த பகவந்த் மான் முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார். இந்நிலையில் பஞ்சாபில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பகவந்த் மான், பதவியேற்பு விழாவிற்காக தாங்கள் அவசரப்படவோ, கவலைப்படவோ மாட்டோம் என்றும் தங்களது கட்சி எம்.எல்.ஏக்கள் நேர்மையானவர்கள் என்பதால் மற்ற மாநிலங்களுக்கு ஓட மாட்டார்கள் என கூறினார். சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த ஊரான கட்கர்காலனில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று கூறிய பகவந்த் மான், நாளை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் பகவந்த் மான் சந்தித்தார். பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்கான ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று மாலை நடைபெற இருப்பதாக தெரிவித்தார். இதனிடையே ஆளுநரை சந்தித்த முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, பதவி விலகல் கடிதத்தை அளித்தார்.