பஞ்சாப் சட்டசபை தேர்தல்களில் எதிராளிகளை தவிடுபொடியாக்கி, அசுர பலத்துடன் ஆட்சி அமைக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு பல்வேறு சவால்கள் தயாராக காத்திருக்கின்றன. அவை என்ன என்பது குறித்து பார்ப்போம்.
பஞ்சாப் மாநிலம் பாகிஸ்தான் எல்லையில் உள்ளதால் ஆயுதங்கள் கடத்தல் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தல் முக்கிய பிரச்னையாக உள்ளது. போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பது மற்றும் ஆயுத கடத்தலை தடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை தவிர்ப்பது ஆகியவை தொடர்ந்து பெரும் தலைவலியாக இருந்து வருகின்றன.
கடத்தலை தடுத்த சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பது ஆகியவை ஆம் ஆத்மி கட்சி சந்திக்க உள்ள முக்கிய சவால்களாக இருக்கும் என பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் கருதுகிறார்கள். அகாலி தளம் மற்றும் காங்கிரஸ் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வந்தார்களே தவிர இந்த பிரச்னையை தீர்க்கவில்லை என்பதால், ஆம் ஆத்மி கட்சி எப்படி இந்த சவாலை சமாளிக்கும் என்பது முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
பகவந்த் மான் தலைமையில் பொறுப்பேற்க உள்ள ஆட்சிக்கு காலி கஜானா இன்னொரு சவாலாக இருக்கும் என அதிகாரிகள் கருதுகிறார்கள். பல்வேறு இலவசங்கள் காரணமாக பஞ்சாப் அரசு சிக்கலான நிதி நிலையை சந்தித்து வருவதால் அதை சரிக்கட்டும் பொறுப்பு புதிய அரசுக்கு முக்கிய தலைவலியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
வேளாண் சட்டங்கள் தொடர்பான விவகாரங்கள் புதிய பஞ்சாப் அரசுக்கு இன்னொரு முக்கிய சவாலாக விளங்குகின்றன. ரத்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் பஞ்சாப் விவசாயிகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இந்த போராட்டத்தை ஒருங்கிணைப்பது வழிநடத்துவது மற்றும் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்ட விவசாயிகளுக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்வது என அனைத்து நடவடிக்கைகளிலும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் முக்கிய பங்கு வகித்தார்கள். ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் மாநிலத்தில் தனது கொள்கைகளை அமல்படுத்தும்போது, விவசாயிகளின் கோரிக்கைகளை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளுமா என்பது தற்போதைய முக்கிய கேள்வியாக உள்ளது.
விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, வட மாநிலங்களில் பயிர் கழிவுகளைக் எரிக்கும் விவசாயிகளின் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என வலியுறுத்தி வந்தனர். பயிர்க் கழிவுகளை எரிப்பதால் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ள தலைநகர் டெல்லியில் கடும் காற்று மாசு ஏற்படுவது அனைவரும் அறிந்ததே. ஆகவே பஞ்சாப் மாநிலத்தில் மான் தலைமையிலான அரசு எடுக்கும் முடிவுகள் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசு நிர்வாகம் செய்யும் டெல்லியில் விளைவுகளை ஏற்படுத்தும்.
இந்தச் சிக்கல்களை தவிர வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது போன்ற பல சவால்கள் புதிய பஞ்சாப் அரசு ஆரம்பக்கட்டத்திலேயே சந்திக்க வேண்டிய பிரச்சினைகளாக உள்ளன. பெண்களுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை அறிவிக்கப்படும் போன்ற பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன என்றும் இதனால் பஞ்சாப் அரசுக்கு செலவினம் அதிகரிக்கும் எனவும் கருதப்படுகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அரசு அளித்து வரும் அனைத்து சலுகைகளும் பஞ்சாப் மாநிலத்திலும் அளிக்கப்பட வேண்டும் என அந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதைத்தவிர பஞ்சாப் முதல்வர் நான் ஆம் ஆத்மி கட்சியின் சர்வ வல்லமை படைத்த தலைவராக விளங்கும் அரவிந்த் கேஜ்ரிவால் வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றுவாரா என்பதும் முக்கிய கேள்வியாக உள்ளது. டெல்லி உடன் ஒப்பிடும்போது பஞ்சாப் பெரிய மாநிலம் என்பதும் பஞ்சாப் மாநில முதல்வருக்கு டெல்லி மாநில முதல்வரை விட அதிக அதிகாரங்கள் உள்ளன என்பதும் சுவாரசியமான பின்னணி. இந்நிலையில் அரவிந்த் கேஜ்ரிவால் பஞ்சாப் மாநில அமைச்சரவை அமைக்கும் ஆலோசனைகளில் மானுடன் ஈடுபட்டுள்ளார்.
கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் யாரை அமைச்சர்களாக நியமிக்க வேண்டும் என்பதும் கட்சி யாரையெல்லாம் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கும் என்பதும் உன்னிப்பாக கவனிக்க படுகிறது. பஞ்சாப் அமைச்சரவையில் 15 அமைச்சர்கள் இடம் பெறுவார்கள் என்றும் ஒரு துணை முதல்வரை நியமிக்கலாம் என்றும் தற்போது ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
-கணபதி சுப்ரமணியம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM