5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு இவ்வளவு பெரிய சோதனையை ஏற்படுத்தும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் வெறும் இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே ஜெயித்திருப்பது காங்கிரஸ் தொண்டர்களால் ஜீரணிக்க முடியாத ஒன்றாக மாறி இருக்கிறது.
பஞ்சாபில் 77 இடங்களில் வெற்றி பெற்று இருந்த நிலையில் அது 18ஆக குறைந்து உள்ளது. அதுபோல மணிப்பூரில் 28 இடங்களை வைத்திருந்த நிலையில் அது 4ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
கோவாவில் 17 இடங்களை கொண்டிருந்த காங்கிரசுக்கு இந்த தடவை 11 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் மட்டும்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 11-ல் இருந்து 19ஆக உயர்ந்து இருக்கிறது.
5 மாநிலங்களிலும் 690 எம்.எல்.ஏ. தொகுதிகளில் 54 இடங்கள் மட்டுமே காங்கிரசுக்கு கிடைத்து இருக்கிறது. நூறாண்டு பாரம்பரியமிக்க காங்கிரசுக்கு இது வரலாறு காணாத வீழ்ச்சி.
காங்கிரஸ் தொடர் தோல்வியை சந்திப்பது ஏன் என்பது பற்றி சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று கட்சிக்குள் எதிர்ப்பு குரல்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோற்றபோதே குலாம் நபி ஆசாத் தலைமையில் 23 காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியாவுக்கு கடிதம் எழுதினார்கள். காங்கிரஸ் கட்சிக்கு புது ரத்தம் ஊட்டும் வகையில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர்கள் அந்த கடிதத்தில் வலியுறுத்தி இருந்தனர்.
ராகுல்காந்தி தலைவர் பதவியை ஏற்க மறுத்து ஓடிய நிலையில் தற்காலிக தலைவர் பொறுப்பை ஏற்று இருக்கும் சோனியாவுக்கு இது பெரிய தலைவலியாக மாறி இருக்கிறது. சோனியா மீதான அதிருப்தியாளர்கள் குலாம்நபி ஆசாத் தலைமையில் ஒன்று திரண்டதால் அவர்களை முடக்கும் நடவடிக்கைகள்தான் நடந்தன.
இதுவரை ஆக்கப்பூர்வமாக காங்கிரஸ் கட்சியில் எந்த அதிரடி நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. தலைவர் பதவியில் இருக்கும் சோனியா உடல்நலக்குறைவு காரணமாக வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளார். இதன் காரணமாக கட்சி நிர்வாகத்தை செய்வது உள்பட பிரசார பொறுப்பை சுமக்கும் நிர்பந்தம் ராகுலுக்கும், பிரியங்காவுக்கும் ஏற்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் 5 மாநில சட்டசபை தேர்தலில் தீவிர பிரசாரம் செய்தனர். குறிப்பாக ராகுலை விட பிரியங்காவின் பிரசாரம் மிக அதிகமாக இருந்தது. உத்தரபிரதேசத்தில் மட்டும் பிரியங்கா 160 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசினார். 40 ரோடு ஷோ நடத்தி மக்களை கவர்ந்தார்.
403 தொகுதிகளில் 320 தொகுதிகளுக்கு பிரியங்கா நேரில் சென்று வந்தார். அதுமட்டுமின்றி பெண்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். பிரியங்கா இவ்வளவு கடினமாக உழைத்தும் காங்கிரஸ் கட்சிக்கு படுதோல்விதான் ஏற்பட்டு இருக்கிறது.
பிரியங்கா கடந்த 6 மாதமாகத்தான் உத்தரபிரதேசத்தில் கவனம் செலுத்தினார். ஆனால் பா.ஜ.க. தலைவர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பே தங்களது தேர்தல் பணியை தொடங்கி விட்டனர். கொரோனா பரவல் ஏற்பட்டிருந்த சமயத்தில் அதை தங்களுக்கு சாதகமாக திருப்பி கொண்டு வீடு வீடாக ஏறி இறங்கி ஆதரவு திரட்டினார்கள்.
இத்தகைய பா.ஜ.க.வின் திட்டமிட்ட பிரசாரம் காங்கிரஸ் கட்சியில் துளி அளவு கூட இல்லை. அதுமட்டுமின்றி ராகுல், பிரியங்காவின் நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் போனதும் துரதிருஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.
மாநில அளவில் தலைவர்களின் செல்வாக்குக்கு உறுதுணையாக இல்லாமல் ராகுலும், பிரியங்காவும் சில தவறான கொள்கை முடிவுகளை எடுத்ததும் காங்கிரசின் வீழ்ச்சிக்கு வழி வகுத்து விட்டது.
இத்தகைய காரணங்களால் காங்கிரசில் சோனியா, ராகுல், பிரியங்காவுக்கு எதிராக மூத்த தலைவர்களில் சுமார் 25 பேர் ஓசையின்றி எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர். தற்போதைய 5 மாநில தேர்தல் தோல்வியால் அந்த எதிர்ப்பு தலைவர்கள் கடும் போர்க்கொடியை உயர்த்தி உள்ளனர்.
எதிர்ப்பு கோஷ்டிக்கு தலைமை வகிக்கும் குலாம்நபி ஆசாத் வெளிப்படையாக வந்து சோனியாவை கடுமையாக விமர்சித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-
5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள முடிவு மிகுந்த வேதனை தருகிறது. தேர்தல் முடிவுகள் வரவர எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. மனதில் ஏற்பட்ட அழுத்தத்தை தாங்கி கொள்ள இயலவில்லை.
இந்த தடவை காங்கிரஸ் 2 அல்லது 3 மாநிலங்களில் நிச்சயமாக ஆட்சியை கைப்பற்றும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இவ்வளவு பெரிய தோல்வி ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை.
காங்கிரசுக்காக என்னை போன்று வாழ்நாள் முழுக்க தியாகம் செய்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். அப்படிபட்டவர்களால் இதை எப்படி தாங்கி கொள்ள முடியும். எங்கள் கண் முன்பு இப்படி காங்கிரஸ் உயிரிழப்பதை எப்படி பார்த்துக்கொண்டிருக்க முடியும்?
மோசமான இந்த நேரத்தில் வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை. உத்தரபிரதேசத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்பது தெரியும். ஆனால் கடந்த தேர்தலை விட இந்த தடவை அதிக இடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். அப்படி வராதது அதிர்ச்சியாக இருக்கிறது.
மற்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் வாக்கு சதவீதம் சரிந்து விட்டது. தற்போதைய சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி அபாயகரமான நிலையில் நிற்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு யார் பொறுப்பு ஏற்பது?அடுத்து என்ன செய்வது? என்பதும் புரியவில்லை.
உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்திருக்க முடியும். ஆனால் அங்கு தொண்டர்களை ஒருங்கிணைக்க தவறி விட்டனர். பஞ்சாப்பில் காங்கிரசுக்கு இவ்வளவு பலத்த அடி விழும் என்பதை மனது ஏற்க மறுக்கிறது. மணிப்பூரில் காங்கிரஸ் கட்சி தோற்ற விதம் எதிர்கால நம்பிக்கையை சிதைப்பதாக உள்ளது.
இவை பற்றியெல்லாம் ஆய்வு செய்ய வேண்டும். இந்த சமயத்தில் குறிப்பிட்டு யாரையும் எதுவும் சொல்ல நான் விரும்பவில்லை. என்றாலும் விரைவில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு குலாம்நபி ஆசாத் கூறினார்.
குலாம்நபி ஆசாத்தின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியில் ஆதரவு அதிகரித்து உள்ளது. பல்வேறு மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் காங்கிரசில் சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.
ஆனால் தோல்வி பற்றி ஆய்வு செய்வது தொடர்பாக இதுவரை சோனியா, ராகுல், பிரியங்கா யாரும் வாயை திறக்கவில்லை. தோல்வியை ஏற்பதாக கூறி உள்ள ராகுல்காந்தி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி மவுனம் சாதித்து வருகிறார்.
இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் சிலர் விரைவில் செயற்குழுவை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே காங்கிரஸ் செயற்குழு விரைவில் டெல்லியில் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது புதிய தலைவர் தேர்தல் மற்றும் கட்சி சீரமைப்பு பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே சோனியா எதிர்ப்பாளர்கள் ரகசியமாக கூடி ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இது காங்கிரஸ் கட்சியில் இதுவரை இல்லாத அளவுக்கு சலசலப்பை உருவாக்கி இருக்கிறது.