பெங்களூரு-விவசாய பணிகளுக்காக தனியார் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடன் பெறுகின்றனர். பல காரணங்களால் நஷ்டமடையும் அவர்கள், கடனுக்கு பதிலாக, ‘பண்டமாற்று முறையில்’ தாங்கள் விளைவிக்கும் விளைச்சலை, கடன் வாங்கிய வங்கியில் செலுத்தி, சித்ரதுர்கா மாவட்ட விவசாயிகள் இன்று போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், தங்கள் விளைச்சலுக்காக விவசாய கூட்டுறவு, தனியார் வங்கிகளிடம் கடன் பெறுகின்றனர்.கடன் வாங்கி தங்கள் நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகள், மழை, வெயில், பூச்சி, விலங்குகள் மற்றும் உரிய விலை கிடைக்காதது போன்ற பல வழிகளில் தங்கள் விளைச்சலை இழக்கின்றனர்.இதை ஈடுகட்ட மீண்டும் கடன் வாங்கி விளைவிக்கின்றனர். மீண்டும் அதே வகையில் நஷ்டமடைகின்றனர்.இதனால் வங்கியில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் பல விவசாயிகளில் சிலர் தற்கொலை முடிவு எடுக்கின்றனர்.இந்நிலையில், சித்ரதுர்கா மாவட்டம் ஹொசதுர்காவை சேர்ந்த விவசாயிகள், ‘பண்டமாற்று முறை’யை கொண்டுவர தீர்மானித்துள்ளனர்.இது குறித்து ராகி கொள்முதல் செய்ய கோரி, விவசாய சங்க தலைவர் சித்தவீரப்பா தலைமையில், போராட்டம் நடத்தி வருகின்றனர்.அவர் கூறியதாவது:ராகி, சிறுதானியம் உட்பட விவசாய பொருட்களுக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலை தருமாறு 15 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறோம்.அரசும், குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவித்தும், இதுவரை வாங்க முன்வரவில்லை.எனவே கடைசி முயற்சியாக, விவசாயிகள் கடன் வாங்கிய அனைத்து வங்கிகளுக்கும், நாங்கள் விளைவிக்கும் ராகிக்கு ஒரு குவிண்டால் 5,000 ரூபாய்; சிறுதானியங்களுக்கு 6 முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயித்துள்ளோம்.இதனை கடனுக்கு ஈடாக வைத்து கொள்ளும்படி, என கடிதம் எழுதியுள்ளோம். அத்துடன் இன்று காலை வங்கி திறந்தவுடன், எங்கள் விளை பொருட்களை ‘டிபாசிட்’ செய்து, எங்கள் போராட்டத்தை துவக்குவோம்.இப்போராட்டம் வெற்றி பெற்றால், மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.அறிவியல் பூர்வமான விலை நிர்ணயித்தால், விவசாயிகள் கடன் சுமையில் சிக்கமாட்டார்கள். இதனால் விவசாயிகள் பலதரப்பட்ட பயிர் விளைச்சலில் ஈடுபடுவர்.இருப்பினும், எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைத்தபடி, விவசாய விளைபொருட்களுக்கு அறிவியல் விலை நிர்ணயம் செய்வதில் அடுத்தடுத்து வந்த அரசுகள் தோல்வியடைந்ததால், நாங்கள் இந்த நடவடிக்கையை எடுப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது.துயரத்திலுள்ள விவசாயிகளை மீட்க, விவசாய பொருளாதார பல்கலைக்கழக பேராசிரியர் பிரகாஷ் கம்மார்டி சமர்ப்பித்த வேளாண் விளைபொருட்களின் அறிவியல் விலை அறிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.ஆரம்பத்திலேயே இதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லையெனில், இந்த போராட்டம் பெரியளவில் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement