2024ம் ஆண்டு வரப் போகும் முடிவைத்தான் 2022 சட்டசபைத்
தேர்தல் முடிவுகள்
காட்டுவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதை
பிரஷாந்த் கிஷோர்
விமர்சித்துள்ளார். அந்தத் தேர்தலை அப்போது பார்த்துக் கொள்வோம். இப்போது நடந்த தேர்தல் மாநில அளவிலானது என்றும் கிஷோர் கூறியுள்ளார்.
பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோர்,
5 மாநில சட்டசபைத் தேர்தல்
குறித்து கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் முடிவு குறித்து தெரிவித்திருந்த கருத்துக்கும் அவர் பதில் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரஷாந்த் கிஷோர் கூறுகையில், 2022 தேர்தல் முடிவுகள், 2024ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு வெள்ளோட்டம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 2024ல் நடக்கப் போவது இந்தியாவுக்கான போர். அதை மாநில அளவிலான தேர்தல் முடிவுடன் ஒப்பிடக் கூடாது. அதை அப்போது பார்த்துக் கொள்ளலாம். இது சாஹேபுக்கு (பிரதமர் மோடிக்கு) நன்றாக தெரியும். இருப்பினும் ரொம்ப புத்திசாலித்தனமாக இந்த தேர்தலை அந்த தேர்தலுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.
மக்களிடையே, எதிர்க்கட்சிகள் மீது இருக்கும் அதிருப்தியை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சிதான் இந்த பேச்சின் பின்புலம் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த தவறான, பொய்யான வாதத்திற்கு யாரும் பலியாகி விட வேண்டாம். யாரும் இதை நம்பி விட வேண்டாம்.உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று 2வது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துள்ளது பாஜக. இது உ.பி. வரலாற்றில் ஒரு சாதனை. அதேபோல உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் பாஜகவே ஆட்சியை தக்க வைத்துள்ளது. பஞ்சாபில் மட்டும் ஆம் ஆத்மி ஆட்சியமைக்கிறது.
தேசிய அளவில் உத்தரப் பிரதேசம் ஒரு முக்கிய மாநிலமாக வட இந்திய அரசியல்வாதிகளால் பார்க்கப்படுகிறது. இந்த மாநிலத்தில் 80 லோக்சபா தொகுதிகள் இருப்பதே இதற்குக் காரணம். இங்கு வெல்லும் கட்சிதான் மத்தியில் ஆட்சியமைக்கும் என்பது அவர்களது வாதமாகும். இதைத்தான் மனதில் வைத்து பிரதமர் நரேந்திர மோடியும் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.
ஆனால் பிரஷாந்த் கிஷோர் அவசரப்படாதீங்க என்று பிரதமருக்கு அறிவுரை கூறியுள்ளார். கடந்த 2014 லோக்சபா தேர்தலின்போது நரேந்திர மோடிக்காக பி.ஆர். வேலை பார்த்தவர் பிரஷாந்த் கிஷோர் என்பது நினைவிருக்கலாம். மோடி என்ற சக்தி உருவாக முக்கியக் காரணமே பிரஷாந்த் கிஷோர்தான். அவர்தான் மோடியை மக்கள் மத்தியில் ஒரு பிம்பமாக உருவகப்படுத்தி உலவ விட்டவர் என்பதும் நினைவிருக்கலாம். அவர் செய்த பல காரியங்களால்தான் மோடிக்கும் செல்வாக்கு கூடியது, பாஜகவும் மத்தியில் பிரமாண்ட வெற்றியுடன் ஆட்சியைப் பிடித்தது.
அதன் பின்னர் பிரஷாந்த் கிஷோர் தேசிய அளவில் பிரபலமானார். மோடியைத் தொடர்ந்து மமதா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், ஜெகன்மோகன் ரெட்டி என பல தலைவர்களுக்காக பணியாற்றியுள்ளார்.