லக்னோ: சமாஜ்வாதி கட்சியின் சுவாமி பிரசாத் மவுரியா பாசில்நகரில் பின்தங்கியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த சுவாமி பிரசாத் மவுரியா, இதற்கு முன்பு பகுஜன் சமாஜ் கட்சியில் முக்கியத் தலைவராக இருந்தார். பலமுறை எம்எல்ஏவாக இருந்த அவரை கட்சி விரோத நடவடிக்கைக்காக 2016-ல் மாயாவதி வெளியேற்றினார்.
இதையடுத்து, 2017 சட்டப்பேரவை தேர்தலுக்கு சற்று முன்பாக மவுரியா, பாஜகவில் இணைந்தார். அவருக்கும் அவரது மகள் சங்கமித்திரைக்கும் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு கொடுத்தது. இருவரும் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டனர். இதில் மவுரியா, கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
மூத்த ஓபிசி தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா, தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சராக பதவி வகித்தார்.
உத்தரபிரதேச தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜகவின் முக்கிய தலைவராக கருதப்பட்ட சுவாமி பிரசாத் மவுரியா நேற்று அகிலேஷ் சிங் யாதவை சந்தித்து அவரது சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.
இது ஆளும் பாஜகவுக்கு ஏற்பட்ட பின்னடைவாகக் கருதப்பட்டது. ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த சுவாமி பிரசாத் மவுரியா முக்கிய தலைவராக கருதப்பட்டார்.
உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாசில்நகர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் சுவாமி பிரசாத் மவுரியா போட்டியிட்டார்.
இன்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் பின்தங்கியுள்ளார். பாஜகவின் சுரேந்திர குமார் குஷ்வாஹாவிடம் தோல்வியடையும் சூழல் உள்ளது.