புதுடெல்லி: மக்களவைத் தேர்தலுக்கான அரை இறுதி போட்டியாக உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல் கருதப்படுகிறது. இங்கு ஆளும் பாஜகவுக்கு தோல்வி ஏற்பட்டால், அது அக்கட்சியின் பல்வேறு எதிர்கால திட்டங்களை தகர்க்கும் நிலை இருந்தது. ஆனால் நேற்று வெளியான உ.பி. தேர்தல் முடிவுகளால் பாஜகவின் எதிர்காலம் கூடுதல் பிரகாசமடைந்துள்ளது.
முடிவுக்கு வந்து விட்டதாக கருதப்பட்ட ‘பிரதமர் மோடி அலை’ இன்னும் ஓயவில்லை என்றே தெரிகிறது. இவரது அலையின் தாக்கம், உத்தராகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா தேர்தல்களிலும் ஏற்பட்டுள்ளது. ‘குஜராத் மாடல்’ என்ற பெயரில் கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட்டார். அதன்பின், உ.பி.யில் தொடங்கிய மோடி அலை நாடு முழுவதிலும் வீசியது. கடந்த ஆண்டு மேற்கு வங்க தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வியால் இந்த அலை ஓய்ந்ததாகக் கருதப்பட்டது. ஆனால், உ.பி. தேர்தல் கருத்துக் கணிப்புகளின்படியே முடிவுகளும் வெளியாகி உள்ளன.
இதற்கு உ.பி.யில் இந்துத்துவா பிரச்சாரத்தையே பாஜக முன்னிறுத்தியது, அயோத்தியை தொடர்ந்து காசி, மதுரா கோயில் களையும் விரிவாக்குவதாக உறுதி அளித்தது, பிரச்சாரங்களில் பாகிஸ் தானையும் ஜின்னாவையும் பாஜக விமர்சித்தது போன்ற பல காரணங்கள் கூறப்படுகின்றன. மத அடிப்படையிலானப் பிரச்சாரங்களால்தான் மோடி அலை வீசத் தொடங்கியதாக ஒரு கருத்தும் உண்டு. இதனால், கடந்த காலங்களை போல் இந்த தேர்தலிலும் ‘மண்டல் கமிஷன் மற்றும் கமண்டலம்’ என்ற அரசியல் போட்டி உருவானது
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் சிங், பிற்படுத்தப்பட்ட சமூக ஆதரவு பெற்ற அனைத்து கட்சிகளுடன் கூட்டணி அமைத்தார். ஏற்கெனவே அகிலேஷிடம் யாதவர் மற்றும் முஸ்லிம் வாக்குகள் இருந்தன. எனினும் அவரது முயற்சிக்கு முழுப்பலன் கிடைக்கவில்லை.
அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய இத்தாஹாதுல் முஸ்லீமின் கட்சி வேட்பாளர்கள், மாயாவதியின் பகுஜன் சமாஜ் முஸ்லிம் வேட்பாளர்களால் சமாஜ்வாதிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. வாரணாசியில் பிரதமர் மோடியின் 3 நாள் கடைசி கட்ட பிரச்சாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் கடந்த 1985-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்று முதல்வர் ஆதித்யநாத் சாதனை படைத்துள்ளார்.