உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் மகத்தான வெற்றி, பிரதமர் மோடி மீதான மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது என்று கட்சியின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசம் உட்பட 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:
உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் பாஜகவுக்கு வெற்றியை தந்துள்ள மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். குறிப்பாக உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெற்றுள்ள மகத்தான வெற்றி பிரதமர் மோடி மீதான மக்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது. ஊழல் இல்லாத, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அமைதியான ஆட்சியை கடந்த 5 ஆண்டுகளில் அளித்த முதல்வர் ஆதித்யநாத்தின் நல்லாட்சியை மக்கள் அங்கீகரித்துள்ளனர்.
உ.பி.யில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி, கிராமங்கள் முன்னேறவும் ஏழைகள், விவசாயி களின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுத்தப்பட்ட பிரதமர் மோடியின் நலத் திட்டங் களுக்கு கிடைத்த வெற்றி. 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் 2017-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் 2019 மக்களவைத் தேர்தலிலும் இப்போது நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவுக்கு உ.பி. மக்கள் தொடர்ந்து வெற்றியை அளித்து வருகின்றனர்.
பிரதமர் மோடியின் தலைமை மீது உத்தரபிரதேச மக்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு தலைவணங்கி என் இதயபூர்வமான நன்றியைத் தெரிவிக்கிறேன். பாஜகவின் கொள்கைகளையும் நலத் திட்டங்களையும் கிராமங்கள் வரை சாதாரண மக்களிடம் கொண்டு சென்ற கட்சித் தொண்டர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.
உத்தராகண்ட்டில் பாஜக மீது நம்பிக்கை வைத்து மீண்டும் வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி. இது பாஜக அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கும் மக்கள் நலப் பணிகளுக்கும் கிடைத்த வெற்றி. பாஜகவுக்கு வெற்றி அளித்துள்ள மணிப்பூர், கோவா மக்களுக்கும் நன்றியை தெரிவிக்கிறேன். வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக செயல்படுத்திய திட்டங்களால் வடகிழக்கு மாநில மக்களின் உள்ளங்களில் பிரதமர் மோடி சிறப்பான இடத்தைப் பெற் றுள்ளார் என்பதையே மணிப்பூரில் பாஜகவின் வெற்றி காட்டுகிறது. இவ்வாறு அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.-பிடிஐ