பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள பந்தீபால்யா அருகே வசித்து வந்தவர் ராஜேஸ்வரி, கலாவதி. இவர்கள் இருவரும் அப்பகுதியில் தையல் பயிற்சி பள்ளி வைத்து நடத்தி வருகின்றனர். கொரோனா காலத்தில் இருவரும் அந்த பகுதி மக்களுக்கு முககவசம், கையுறைகள் தைத்து வழங்கினர்.
இதனால் இவர்கள் மீது அப்பகுதி மக்களிடையே நம்பிக்கை ஏற்பட்டது. இதையடுத்து அவர்களது தையல் பயிற்சி பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை படிக்க அனுப்பி வைத்தனர். அதே பகுதியை சேர்ந்த ஒரு தம்பதி தனது 16 வயது மகளை தையல் படிக்க ராஜேஸ்வரி, கலாவதியின் தையல் பயிற்சி பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது ராஜேஸ்வரியும், கலாவதியும், சிறுமிக்கு குளிர்பானம் மற்றும் கஷாயம் கலந்து கொடுத்துள்ளனர். இதனால் சிறுமி மயங்கினாள். அப்போது அங்கு வந்த கேசவமூர்த்தி என்பவர் சிறுமியை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மயக்கம் தெளிந்து எழுந்த சிறுமியை ராஜேஸ்வரி, கலாவதி இருவரும் இதை வெளியில் சொன்னால் கொலை செய்வோம் என்று மிரட்டியதாக தெரிகிறது.
மேலும் தாங்கள் சொல்வதை கேட்கவேண்டும் என மிரட்டி 4 நாட்கள் அங்கேயே அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். தொடர்ந்து அந்த சிறுமியை கோரமங்களாவைச் சேர்ந்த சத்யராஜ், யலஹங்காவைச் சேர்ந்த சரத் மற்றும் பேகூரைச் சேர்ந்த ரபீக் ஆகியோருக்கும் விருந்தாக்கி உள்ளனர்.
அந்த கும்பலின் மிரட்டலுக்கு பயந்து சிறுமி வெளியில் சொல்லாமல் வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதற்கான காரணத்தை பெற்றோர் கேட்டபோது சிறுமி நடந்த விவரத்தை அழுதபடி கூறினாள்.
சிறுமியின் பெற்றோர்கள் உடனடியாக எச்.எஸ்.ஆர். லேஅவுட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து பலாத்கார கும்பலை பிடிக்க எச்.எஸ்.ஆர். லேஅவுட் இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி ராஜேஸ்வரி, கலாவதி ஆகியோரை முதலில் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கேசவமூர்த்தி உள்ளிட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதில் கேசவமூர்த்தி தமிழகத்தில் உள்ள ஒசூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பொதுமேலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகார் கொடுக்கப்பட்ட 36 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.