சென்னை: பெண்கள், குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று மாதர் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இக்கடைகளில் வாரநாட்களில் தினந்தோறும் ரூ.90 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகின்றன. வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் ரூ.120 கோடி முதல் ரூ.200 கோடி வரை மதுபான விற்பனை நடைபெறுகிறது.
மதுபான விற்பனையால் ஒருபுறம் தமிழக அரசுக்கு வருவாய் உயர்ந்து வந்தாலும், மறுபுறம் மது அருந்துவோரின் உடல்நலன் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தைச் சார்ந்த பெண்கள், குழந்தைகள் என பல தரப்பினருடைய எதிர்கால வாழ்வு கேள்விக்குறியாகி வருகிறது. இவற்றுக்குத் தீர்வு காண படிப்படியாக மதுபானக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
இதுதொடர்பாக, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில தலைவர் பத்மாவதி கூறியதாவது:
பெண்களுக்கு நேரடி பாதிப்பு
பெண்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், டாஸ்மாக் கடைகளுக்குச் சென்று ஆண்கள் மது அருந்திவிட்டு வீட்டுக்கு செல்லும்போது அங்குள்ள பெண்கள்தான் நேரடியான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.
குடும்ப வன்முறைகள் அதிகரிப்பு, கணவன் – மனைவி பிரிவது,இளம் விதவைகளின் எண்ணிக்கை உயர்வது உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை பெண்கள் சந்திக்கக்கூடிய சூழல் நிலவி வருகிறது. இதனால், பெண்களின் முன்னேற்றம், எதிர்காலம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
பெண்கள் பணிக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தை சண்டை போட்டு வாங்கி செல்லும் ஆண்களும் இருக்கின்றனர். இதனால், குடும்பத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. வீட்டில் இருக்க கூடியபெண்கள், மனரீதியாக கடும் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர்.
எனவே, மதுவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது, கவுன்சிலிங் அளிப்பது ஒருபுறம் இருந்தாலும், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைத்து, பூரண மது விலக்கை கொண்டு வந்தால்தான் பெண்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குழந்தை உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் கூறியதாவது:
குடும்பத்தில் பொருளாதார இழப்பு
மதுவினால் அதிக பாதிப்புகளைச் சந்திப்பது பெண்களும், குழந்தைகளும்தான். குடும்ப பிரச்சினையின் காரணமாக தாய் கருவுற்றநாளில் மனதளவில் பாதிக்கப்பட்டால், அது கருவில் இருக்கக்கூடிய குழந்தையையும் பாதிக்கும் என்றுஆய்வுகள் கூறுகின்றன. இத்தகையபாதிப்புகள் மது அருந்திவிட்டு ஆண்கள் சண்டை போடுவதால்அதிகம் ஏற்படுகிறது. இவ்வாறு, கர்ப்ப காலத்தில் இருந்தே குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
மது அருந்தினால் ஆற்றல் கூடும்,மகிழ்ச்சியாக இருக்கலாம் போன்றதவறான எண்ணம் சிறார்களின் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. இதனால், சிறார்களும் மது அருந்தஆரம்பித்துவிடுகின்றனர். குடும்ப வன்முறையினால் பெண் குழந்தைகள் பாலியல்ரீதியான பாதிப்புகளையும் சந்திக்கின்றனர்.
மது, அந்த நபரை மட்டும் பாதிப்பதில்லை; அவரைச் சார்ந்திருக்கக் கூடிய நபர்கள், சமூகத்தையும் பாதிக்கிறது. பொருளாதார இழப்பு காரணமாக குழந்தைகளுக்கு சத்தான உணவு, கல்வி உள்ளிட்டவை கிடைக்காமல் ஆளுமை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, மதுவின் தீமைகள் குறித்து மக்கள் மத்தியில் தமிழகஅரசு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைக்கும் நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.