மதுரை: மதுரை மாட்டுத்தாவணியில் மத்திய, மாநில அரசு பங்களிப்புடன் ரூ. 85 கோடியில் அமைவதாக 11 ஆண்டிற்கு முன் திமுக ஆட்சியில் அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிரந்தர காய்கறி அங்காடி திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் மறுபரிசீலனை செய்ய வியாபாரிகள், விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை மாட்டுத்தாவணியில் ஒருங்கிணைந்த சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது. இந்த மார்க்கெட்டில் குளிரூட்டும் வசதி எதுவும் இல்லை. அதனால், விலையேற்றவும், காய்கறிகள் அழிவையும் தடுக்க முடியவில்லை. அதனால், இப்பகுதியில் 27 ஏக்கரில் மத்திய மாநில அரசு பங்களிப்புடன் ரூ.85 கோடி மதிப்பில் 6 பகுதிகளாக 648 கடைகள் கொண்ட குளிரூட்டும் அதி நவீன நிரந்தர காய்கறி அங்காடி வளாகம் அமைக்க கடந்த 2010ஆம் ஆண்டு மு.க.அழகிரி மத்திய அமைச்சராக இருந்தபோது முன்னாள் முதல்வர் கருணாநிதி இதற்கான அரசாணையை வெளியிட்டார்.
இந்நிலையில் 11 ஆண்டுகளை கடந்த நிலையில் இந்த திட்டம் குறித்து எந்தவித நடவடிக்கைகளும், தகவலும் விவசாயிகளுக்கும், காய்கறி வியாபாரிகளுக்கு தெரியவில்லை. அதனால், இந்தத் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்து விவசாய குறை தீர் கூட்டத்தில் கிருஷ்ணபாண்டி என்ற விவசாயி அளித்த மனுவிற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ள மதுரை வேளாண்மை விற்பனைக்குழு செயலாளர் வி.மெர்சி ஜெயராணி, மாட்டுத்தாவணி நிரந்தர காய்கறி மார்க்கெட் திட்டமானது கடந்த 02.04.2018 அன்று நடைபெற்ற 16வது மாநில அளவிலான நிலைக்குழுவில் கைவிடப்பட்டதாகவும், திட்டத்தை மறுபரிசீலனை செய்ய அரசு அனுமதி தரும்பட்சத்தில் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். இது வியாரிகள், விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்ட்ரல் மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்புத் தலைவர் என்.சின்னமாயன் கூறுகையில், ”மாநில அரசு ரூ.30 கோடியும், மத்திய அரசு ரூ.55 கோடியும் இந்த திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்பிறகு அதிமுக ஆட்சி வந்ததால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது அதிகாரிகள், 2018ம் ஆண்டிலே கைவிட்டதாக தகவல் கூறுகின்றனர். இதற்கு முன் பல முறை கேட்டும் அதிகாரிகள் வாய் திறக்கவில்லை.
அதனால், அதிமுக ஆட்சியில் கைவிடப்பட்ட இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை மறுபசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும். தென் மாவட்ட விவசாயிகளின் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கனவு திட்டமான இந்த காய்கறி மார்க்கெட் மூலம் ஒரே இடத்தில் அனைத்து வகை காய்கறி மற்றும் பழங்களை சேகரிக்க முடியும். நுகர்வோருக்கு தரமான காய்கறி மற்றும் பழங்கள் கிடைப்பதுடன், விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும். இந்த திட்டத்தால் 2 கோடி மக்கள் பயன்பெறுவார்கள்” என்று தெரிவித்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு காய்கறி அங்காடிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் 3 திட்டங்களை செயல்படுத்த மாநகராட்சி முயற்சித்தபோது அந்த இடத்தில் நிரந்தர காய்கறி அங்காடி மட்டுமே செயல்படுத்த வேண்டும் என கூறி கடந்த 2019ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது குறிப்பிடதக்கது.
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த இடத்தில் கலைஞர் நூலகம் அமைப்பதற்காக பார்வையிட்டபோது வியாபாரிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனாலே, நத்தம் சாலையில் நூலகம் இடமாற்றம் செய்யப்பட்டது.